அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளது.
கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த 6 வாரங்களே நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வாரங்களேயான இந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த தகவலை அம்மாநில ஆளுநர் நெட் லமொண்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிறந்து 6 வாரங்களே ஆக குழந்தை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை அமெரிக்காவில் கொவிட்-நைன்ரீன் ஆட்கொல்லி நோய் பரவும் வீதமானது, இத்தாலியில் நோய் பரவும் வீதத்திற்கு சமமானதாகக் காணப்படுகிறது என துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், இரண்டு இலட்சத்து ஆறாயிரத்து ஏழு பேருக்கு கொவிட்-நைன்ரீன் வைரஸ் தொற்றியுள்ளது. இங்கு நான்காயிரத்து 500 இற்கு மேற்பட்ட மரணங்கள் சம்பவித்துள்ளதை பிந்திய புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தமது நாட்டைப் பொறுத்தவரையில், அடுத்து வரும் வாரங்கள் பயங்கரமானவையாக இருக்குமென ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நேற்று எச்சரித்திருந்தார். அதற்குப் பின்னர், துணை ஜனாதிபதி அமெரிக்காவையும், இத்தாலியையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
பிரிட்டனிலும் கொரோனா-வைரஸ் மரணங்களின் எண்ணிக்கை 563ஆல் அதிகரித்து, இரண்டாயிரத்து 532 வரை உயர்ந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்களை சோதிக்கப் போவதாக பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரானிலும் மரணங்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது. இத்தாலியின் புள்ளிவிபரங்களை ஆராய்கையில், நோய்த் தொற்று வீதமும், மரணங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன.
உலகம் முழுவதிலும் ஒன்பது இலட்சத்து 34 ஆயிரத்து 668 பேருக்கு கொரோனா-வைரஸ் தொற்றியுள்ளமை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. 47 ஆயிரத்து 181 மரணங்கள் சம்பவித்துள்ளன. எனினும், ஒரு இலட்சத்து 94 ஆயிரம் பேர் வரை குணமடைந்துள்ளனர்.
கொவிட்-நைன்ரீன் தொற்றைக் குணப்படுத்தக்கூடிய முறையைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். இந்த சிகிச்சை முறையை அமெரிக்க இராணுவம் சோதிக்குமென ஜேக்கப் கிளான்வில்லி என்ற மருத்துவ நிபுணர் குறிப்பிட்டுள்ளார். இது பற்றிய செய்தியை நிவ்யோர்க் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது.