அமெரிக்காவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாஸ்போர்ட் திருட்டு

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இளையராஜா தன் பாடலை பாடக்கூடாது என்று கூறிவிட்டாலும் தான் பாடிய மற்ற பாடல்களின் மூலம் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதனை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் முன்னின்று நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் வாஷிங்டனில் தங்கியிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து இந்தியா கிளம்பியபோது அவரது பாஸ்போர்ட், பேன் கார்ட், கிரடிட் கார்ட், கொஞ்சம் பணம், இசை குறிப்புகள் வைத்திருந்த கைப்பை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு தகவல் கொடுத்து வங்கி கணக்குகளை முடக்கச் சொன்னார். பாஸ்போர்ட் காணாமல் போனது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் தகவல் கொடுத்தார்.

இந்திய தூதரக அதிகாரிகள் வேகமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் எஸ்.பி.பாலசுப்பிரமணித்துக்கு மாற்று பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது பேஸ்புக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதோடு இசை நிகழ்ச்சிக்கு ஒத்துழைத்த பாடகர், பாடகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.

Related Posts