அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் தடுப்புவேலியை தாண்டி குதித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கிறது வெள்ளை மாளிகை. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை எப்போதுமே பலத்த பாதுகாப்புகளுடன் காணப்படும்.
இம்மாளிகை உலகின் அதிபாதுகாப்பான இடங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் தடுப்பு வேலியை தாண்டி உள்ளே நுழைய முயன்ற நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து வெள்ளை மாளிகையின் கதவுகள் அனைத்தும் அவசர அவசரமாக மூடப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வெள்ளை மாளிகைக்கு வந்திருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கானோர் வெள்ளை மாளிகை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவர்தான் வெள்ளை மாளிகையுள் நுழைய முயன்றிருக்கலாம் என தெரிகிறது.
இருப்பினும், அந்த நபர் சதிதிட்டங்களுடன் உள்ளே நுழைந்தாரா எனவும், தீவிரவாத இயக்கங்களில் தொடர்புடையவரா எனவும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதேபோன்று கடந்தாண்டும் வெள்ளை மாளிகையின் தடுப்பு சுவரை தாண்டி ஒருவர் உள்ளே நுழைய முயன்றது குறிப்பிடத்தக்கது.