அமெரிக்காவில் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் உலக வங்கியின் அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஏ.தர்மரத்தினத்தின் மகளும், இலங்கை வங்கியின் முன்னாள் பொதுமுகாமையாளர் சி.லோகநாதனின் பேர்த்தியுமாவார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணம், வடமராட்சியை சேர்ந்தவர்களாவர்.
மைதிலி ராமன், அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தில் குற்றப்பிரிவு பதில் உதவி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் Yale பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதுடன், சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்.
குற்றவியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்கும் மைதிலி ராமன், அமெரிக்கா முழுவதிலும் உள்ள சம்ஷ்டி குற்றவியல் வழக்குகளை கையாளும் சுமார் 600 அரச சட்டவாளர்களுக்குத் தலைமை தாங்கவுள்ளதுடன், குற்றவியல் சட்டங்களை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருப்பார்.
அத்துடன் அந்தந்த மாவட்டங்களில் குற்றவியல் விவகாரங்களை விசாரணை செய்யும், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தும் 93 அமெரிக்க சட்டவாளர்களுடனும் இவர் நெருக்கமாகப் பணியாற்றுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மைதிலி ராமன் கடந்த 2008ம் ஆண்டு தொடக்கம், குற்றவியல் பிரிவில் பணியாற்றி வருகிறார். 2009 செப்ரெம்பர் 2ம் திகதி தொடக்கம் பதில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர், 2013 மார்ச் 1ம் திகதி முதன்மை பிரதி உதவி சட்டமா அதிபர் மற்றும் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மைதிலி ராமன் 1996ல் அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தில் இணைந்து, குற்றவியல் பிரிவில், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் முன்னிலையாகி வந்தார். 1999 தொடக்கம் 2008 வரை, மேரிலான்ட் மாவட்டத்தில் சட்டமா அதிபர் பணியகத்தில் உதவி அமெரிக்க சட்டவாளராக பணியாற்றினார்.
இதன்போது போதைப்பொருள் தடுப்பு, நிதி முறைகேடு, வன்முறைகள், சிறார் கடத்தல், குடியியல் உரிமை வழக்குகளில் இவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது