அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் வெளியாகியது!34 வது அமர்வு வரை காலக்கெடு!

GenevaIn-the-cityUN-Humanஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அலங்கை போர்க்குற்ற விசாரணையறிக்கையினை தொடர்ந்து  அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்தின் உத்தேச நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மனித உரிமைகள் தொடர்பிலான சர்வதே பிரகடனங்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வலியுறுத்திப்பட்டுள்ளது.இலங்கையின் சுதந்திரம், இறைமை, பௌதீக ஒருமைப்பாடு, ஐக்கியதன்மை ஆகியனவற்றை மதிப்பதாகவும் , ஒட்டுமொத்த இலங்கை மக்களும் சர்வதேச பிரகடனங்களின் அடிப்படையில் மனித உரிமைகளை அனுபவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரலாற்று சிறப்பு மிக்க வகையில் நடைபெற்ற தேர்தல்களையும்  நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையும் தீர்மானம் வரவேற்றுள்ளது.

ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தல் ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவும் முயற்சி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய ஐக்கிய நல்லிணக்க நிறுவனம் நிறுவ எடுக்கப்பட்ட முயற்சி ஆகியன பாராட்டுக்குரியது என கூறப்பட்டுள்ளது.

உத்தேச தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 26 பரிந்துரைகளும் வருமாறு.

1. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 30ம் அமர்வில் இலங்கையில் நல்லிணக்கத்தையும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்களையும் ஏற்படுத்த வேண்டுமெனக் கோரி மனித உரிமைப் பேரவை ஆணையாளர் ஆற்றிய உரை வரவேற்கப்பட வேண்டியது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25-1 தீர்மானங்களை அமுல்படுத்தவேண்டும்.

2. முழுமையான அடிப்படையில் நீதியை அமுல்படுத்துவதற்கு இலங்கையின் புதிய அரசாங்கம் காட்டி வரும் அர்ப்பணிப்பு கவனிக்கப்பட வேண்டியது. குறிப்பாக குற்றவியல் தண்டனை, உண்மையைக் கண்டறியதல், நிறுவன ரீதியான மாற்றங்கள் மற்றும் மீள பிரச்சினைகள் ஏற்படாமல் தடுத்தல் போன்ற காரணிகளை சுட்டிக்காட்ட முடியும்.

3. நீதியை அமுல்படுத்துவதில் நம்பகத்தன்மையை உறுதி செய்ய இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள், சிவில் சமூகம் உள்ளிட்ட பல்வெறு தரப்பினருடனும் விரிவான தேசிய கலந்துரையாடல்களின் ஊடாக இதனைச் செய்ய முடியும். சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள முடியும். சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் வலுவான ஓர் பாதுகாப்புப் பொறிமுறைமை அவசியமானது.

4. அனைத்து இனங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் அவசியமானது என்ற இலங்கை புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியது. பக்கச்சார்பற்ற நேர்மையான விசாரணைப் பொறிமுறைமை மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மூலம் விசாரணைகள் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். சர்வதேச நீதவான்களை உள்ளடக்கிய பொறிமுறைமை ஒன்றை உருவாக்குமாறு இலங்கையை ஊக்கப்படுத்துகின்றோம்.

5. சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தண்டனை விதிக்க உள்நாட்டு சட்டங்களை திருத்தி அமைக்க வேண்டும். குறிப்பாக உள்நாட்டு சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

6. உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள இடம்பெறாமை குறித்த ஆணைக்குழு உருவாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது. இந்தப் பொறிமுறைமைகள் பக்கச்சார்பற்ற நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். பக்கச்சார்பற்ற, தொழில்சார் தகமையுடைய நேர்மையானவர்கள் இந்த பொறிமுறைமகளை அமுல்படுத்தும் நிறுவனங்களின் தலைமைப் பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும்.

7. அனைத்து நீதிமன்ற பொறிமுறைமைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட வெளிநாட்டு தரப்புக்களின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நிறுவப்பட வேண்டும்.

8. பாதுகாப்புத் துறைசார் விவகாரங்களில் காத்திரமான மாற்றங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். பாரிய மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளப்படுத்தப்படும் பாதுகாப்பு அதிகாரிகள் உயர் பதவிகளில் அமர்த்தப்படக்கூடாது. குறிப்பாக தற்காலிக நீதிப் பொறிமுறைமையில் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிய படையதிகாரிகள் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளடக்கப்படக்கூடாது.

9. சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அரசாங்கத்தின் புதிய சட்டத் திருத்தம் வரவேற்கப்பட வேண்டியது. இந்தக் சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமானது. பாதுகாப்பு தரப்பினர் அரச அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியமளிப்பவர்கள் பாதுகாக்கப்படக்கூடிய வகையில் சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.

10. அரசாங்கப்படையினரால் பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக சிவியலின் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடு முழுமையான அகற்றிக்கொள்ளப்பட வேண்டும். சிவலியன்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும்.

11. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட ஆக்கபூர்வமான பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டும். அனைத்து இலங்கையர்களுக்கும் பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், நீதியை நாட்டல் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

12. ஊடகவியிலாளர்கள், ஊடக நிறுவனங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிறுபான்மை மத இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டியதுடன் மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க வேண்டும்.

13. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்தல் மற்றும் ரத்து செய்தல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வரவேற்கப்பட வேண்டியது. சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட முடியும்.

14. பலவந்த கடத்தல்கள் தொடர்பிலான சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திட அரசாங்கம் காட்டும் முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது. காணாமல் போனவர்கள் தொடர்பில் உறவினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

15. சட்டவிரோத படுகொலைகள், பலவந்த ஆட்கடத்தல்கள், வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், கைது செய்து தடுத்து வைத்தல் குறித்த கொள்கைகளில் மாற்றம், சிவில் நிறுவனங்களை வலுப்படுத்தல், அதிகாரப் பகிர்வின் ஊடாக அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தல், கருத்து சுதந்திரத்தினை உறுதி செய்தல் ஆகியனவற்றை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

16. 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி அரசாங்தக்தினால் வெளியிடப்பட்ட சமாதானப் பிரகடனம் வரவேற்கப்பட வேண்டியதாகும். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் பயன்படுத்த சில சட்டங்களில் திருத்தங்களைச் செய்தல் மற்றும் இரத்து செய்தல் குறித்து அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். சர்வதேச பிரகடனங்களுக்கு மதிப்பளிப்பதனை உறுதி செய்ய வேண்டும்.

17. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்டத்தை உரிய முறையில் திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25-1 தீர்மானத்தின் அடிப்படையிலும் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிக்க உரிய வகையில் உள்ளநாட்டு சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

18. கடந்த காலத்தில் விசாரணை நடத்தப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதி வரவேற்கப்பட வேண்டியது. நிசாந்த உதலாகம அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளை இந்த மாத இறுதிக்குள் பகிரங்கப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி வெலிவேரியவில் குடிநீர் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல் குறித்த விசாரணை அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும்.

19. மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட அனைத்து ஆவணங்கள் அறிக்கைகளையும் பேணிப் பாதுகாக்கும் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும். தனியார் அல்லது பொது நிறுவனங்களினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் அனைத்து பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

20. அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கக் கூடிய வகையில் அதிகாரப் பகிர்வு திட்டமொன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். அவ்வாறு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பதன் மூலமே நாட்டின் அனைத்து சனத்தொகையினரும் மனித உரிமைகளை அனுபவிக்க முடியும். 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் வட மாகாணசபை உள்ளிட்ட அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

21. நீதியை நிலைநாட்டும் முனைப்புக்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, அதன் ஆணையாளர் மற்றும் சர்வதேச சமூகம், இலங்கை வாழ் மக்கள், சர்வதேச அமைப்புக்கள், சர்வதேச நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிக்கொள்ள வேண்டும்.

22. அனைத்து வகையிலான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பால் நிலைசார் ஒடுக்குமுறைகளை இல்லாதொழிக்க இலங்கையை ஊக்கப்படுத்த வேண்டும். பால் நிலை ஒடுக்குமுறை சித்திரவதைகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

23. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அலுவலகம், இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றதா என்பது மதிப்பீடு செய்யப்பட வேண்டும். குறிப்பாக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 33வது  அமர்வுகளின் போது வாய்மொழி மூல அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும். பரிந்துரைகள் எவ்வாறு அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து 34வது அமர்வுகளில் முழு அளவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

24. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இலங்கை தொடர்ந்தும் நல்ல உறவுகளைப் பேண வேண்டும். இலங்கையின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அதிகாரிகள் மேற்கொள்ளும் விஜயங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். குறிப்பாக சட்டவிரோத ஆட்கடத்தல்கள் தொடர்பான இலங்கை விஜயத்திற்கு அனுமதியளிக்க வேண்டும். சில பிரதிநிதிகள் நீண்ட காலத்திற்கு முன்னதாக இலங்கைக்கு விஜயம் செய்ய விடுத்த கோரிக்கைகளுக்கு இதுவரையில் பதிலளிக்கப்படவில்லை அவ்வாறான கோரிக்கைகள் குறித்து ஆராயப்பட வேண்டும். (ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 25-1 தீர்மானம்)

25. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் பரிந்துரைகளை அமுல்படுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களும் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும்.

26. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையகத்துடன் இணைந்து செயற்பட புதிய அரசாங்கம் காட்டும் சிரத்தை கவனிக்கப்பட வேண்டியது. புதிய தீர்மானத்தில் இந்த விடயம் உள்ளடக்கப்படும்.

என உத்தேச நகல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு நாடுகளிடம் இந்த அறிக்கையை வழங்கி பேச்சுவார்த்தை நடத்தி சில வேளைகளில் திருத்தங்களை மேற்கொண்டு இறுதியில் இந்த தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

Related Posts