“அமிர்தலிங்கம், சம்பந்தனால்தான் போராட்டத்தில் இறங்கினோம்” -விநாயகமூர்த்தி முரளிதரன்

Muralytharanகடந்த காலத்தில் அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்றவர்களின் வார்த்தைகளைக் கேட்டு நாங்கள் போராடினோம். அவர்கள் கூறியபடியால்தான் போராட்டத்தில் இறங்கினோம். ஆனால் இறுதியில் என்ன நடந்தது? வெறும் அழிவு மட்டும்தான்’ என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, படுவான்கரையில் அமைந்துள்ள எல்லைப் பிரதேசமான புதுமன்மாரிச்சோலை கிராமத்திற்கு மின்சார விநியோகத்தினைத் வழங்கி வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

‘மட்டக்களப்பு மாவட்டத்தின் மின்சாரத் தேவையினைப் பூர்த்தி செய்வதற்காக மொத்தமாக 600 கோடி ரூபா நிதியினை தற்போது பொதுநிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவுள்ள ஜோன் செனவிரத்ன அக்காலத்தில் மின்சார சபை அமைச்சராகவிருந்த காலத்தில் ஒதுக்கீடு செய்திருந்தார்.

நாங்கள் கடந்த 30 வருடகால யுத்தத்தினால் பெற்ற பலன்கள் ஒன்றுமில்லை. யுத்தம் நடந்திருந்தால் இன்று வழங்கபட்ட மின்சாரம் கிடைத்திருக்காது. இப்பிரதேச மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் என்னிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க இன்று இந்த மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒருவருடத்தின் பின்னராவது இந்த அடிப்படைத் தேவை பூர்த்தி செய்யபட்டுள்ளது. ஆனால் இன்றுவரை யுத்தம் நீடித்திருந்தால் மின்சாரம் என்பது இக்கிராம மக்களுக்கு எட்டாக் கனியாகவே அமைந்திருக்கும்.

எல்லைக் கிராமமான இந்த கிராமத்தினை இந்திய வீடமைப்புத் திடத்தினுள் உள்வாங்குமாறு நான் சம்மந்தப்பட்டவர்களுக்கு பணித்துள்ளேன்.

யுத்தத்தினால் நாம் பெற்ற பலன் என்ன என்று கேட்டால் ஒன்றுமில்லை என்றுதான் பதில் கூறலாம். ஆசை வார்த்தை காட்டி வாக்குகளை சூறையாடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வருவார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணசபைக்கு 11 உறுப்பினர்களை அனுப்பியுள்ளார்கள். இவர்கள் என்ன செய்கின்றார்கள்? நாட்டுக் கட்டைபோல் இருக்கின்றார்கள்.

அரசியலுக்கு ஒருவரை நீங்கள் தெரிவு செய்து அனுப்பினால் அவரால் உங்களுக்கு இலாபம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனுப்பக் கூடாது.

ஆசை வார்த்தைகளைக் கூறி பெரிதும் ஏமாற்றப்படுபவர்கள் படுவான்கரை மக்கள்தான்.

அதுபோன்றுதான் கடந்த காலத்தில் அமிர்தலிங்கம், சம்மந்தன் போன்றவர்களின் வர்த்தைகளைக் கேட்டு நாங்கள் போராடினோம், அவர்கள் கூறியதால்தான் நாங்கள் போராட்டத்தில் இறங்கினோம், ஆனால் இறுதியில் என்ன நடந்தது? வெறும் அழிவு மட்டும்தான்.

மட்டக்களப்பு மாவட்டம் தற்போது வறுமையில் முதலிடத்தில் உள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்காக அனைவரும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியினை மேலோங்கச் செய்யவேண்டும்’ என்றார்.

Related Posts