இந்தியாவின் வடக்கு மாநிலமான பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் புனித ஆலயமான பொற்கோவிலில் சீக்கியர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவில் 1984ஆம் ஆண்டு இந்த பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கிய ஆயுதக்குழுவினர் மீது இந்திய அரசு நடத்தியத் ஆபரேஷன் புளூஸ்டார் எனப்படும் தாக்குதலின் முப்பதாவது ஆண்டு நிறைவு நாளான வெள்ளியன்று அந்த கோவிலில் சிறப்பு பிரார்தனைகள் நடத்தப்பட்ட சமயத்தில் இந்த மோதல்கள் நடந்துள்ளன.
குறைந்தது 3 பேராவது படுகாயத்துடன் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் அமிர்தசரஸ் நகரிலுள்ள சீக்கியர்களின் மிகவும் புனிதத் தலமான பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கியத் தீவிரவாதிகளை உயிரிடுடன் பிடிக்கவோ அல்லது உடலாக மீட்கவோ, இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு முன்னெடுத்த நடவடிக்கையில் குறைந்தது 400 பொதுமக்களும் 87 படைவீரர்களும் கொல்லப்பட்டதாக அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை கிட்டதட்ட 1000 என்று சீக்கியர்கள் தெரிவிக்கின்றனர்.
முப்பது வருடங்களுக்கு முன்னர் அந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியிக்கு வெள்ளிகிழமையன்று இந்த புனித கோவிலில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கூடியிருந்தர்.
ஆனால் அந்த விழா துவங்கிய உடனே வன்முறை வெடித்தது.
1984ஆம் ஆண்டில் இறந்த தியாகிகளை நினைவுகூர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் இது நடந்தது மிகவும் வருத்தமான ஒன்று என்று பஞ்சாப் மாநிலத்தின் ஆளுங்கட்சியான அகாலி தளம் கட்சியின் சார்பில் பேசிய பிரேம் சிங் சந்துமஜ்ரா தெரிவித்துள்ளார். கோவிலுக்கு இன்றும் அவமரியாதை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த வன்முறை செயலில் ஈடுப்பட்டிருந்தவர்கள் மீது அந்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரேம் சிங் சந்துமஜ்ரா தெரிவித்தார்.
இந்த வன்முறை தொடர்பில் பேசிய அந்த பகுதியிலிருக்கும் மூத்த காவல் துறை அதிகாரி, அங்கு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகவும், தற்போது அங்கு அமைதி நிலவுவதாகவும் தெரிவித்தார்.