எனக்கும் அப்பாவை கட்டிப்பிடிச்சுக் கொண்டு பைக்கில இருந்து பள்ளிக் கூடம் போக ஆசையாக இருக்குது மாமா ஆனா…. அப்படி நடக்குமா? என தனது பெரும் ஏக்கத்தை வெளிப்படுத்தினாள் அருள்பிரகாஸ் றஜிதா தரம் நான்கில் கல்வி கற்கும் ஒன்பது வயது மாணவி.
கிளிநொச்சி அம்பாள்குளத்தில் வசித்துவரும் றஜிதாவின் அப்பா அருள்பிரகாஸ் வயது 44 கடந்த எட்டு வருடங்களாக அரசியல் கைதியாக சிறையில் வாடுகின்றார்.
றஜிதாவும், அவளது அக்கா வேனுஜாவும் அப்பா தை பொங்கலுக்கு வருவார், சித்திரை புத்தாண்டுக்கு வருவார், சுதந்திர தினத்திற்கு வருவார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து எட்டு வருடங்கள் கடந்து விட்டது. றஜிதாவுக்கு ஒரு வயது இருக்கும் போதே அருள்பிரகாஸ் விடுதலைப்புலிகளுக்கு உதவினார் எனும் சந்தேகத்தில் கைது செய்து கொண்டு சென்றதாக அவரது மனைவி விஜலட்சுமி கூறுகின்றார்.
றஜிதா தனது அப்பாவின் முகத்தை கம்பிகளுக்கு உள்ளேயே கண்டிருக்கின்றார். அவளுக்கு தனது அப்பா தொடர்பில் நிறையவே எதிர் பார்ப்புகள் உண்டு ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் றஜிதாவை இலவு காத்த கிளியாகவே கடந்த எட்டு வருடங்களாக வைத்திருக்கிறது. தனது வகுப்பில் சக மாணவிகள் தனது அப்பா வாங்கி தந்ததாக பொருட்களை காட்டுகின்ற போதும், அப்பாவுடன் கடற்கரைக்கு போனதாக, கடைக்கு போனதாக அவர்கள் பேசுகின்ற போதும் றஜிதாவின் பிஞ்சு உள்ளமும் தானும் தனது அப்பாவுடன் இவ்வாறு நாட்களை கழிப்பதற்காக ஏங்குகின்றமை அவளது பேச்சிலிருந்து தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.
ஒரு வயது முதல் தனது அப்பாவின் அரவணைப்பு இன்றி வாழ்ந்த றஜிதா இப்போது தனது அப்பாவின் அன்புக்கும் அரவணைப்புக்கும் நாளும் ஏங்கிகொண்டிருக்கின்றவளாக காணப்படுகின்றாள். தனது அப்பாவை பாசத்தோடு கட்டி அணைத்துக்கொள்ள, செல்லமாக சண்டைபிடிக்க ஆசைப்படுகின்றாள் ஆனால் எப்போது நிறைவேறும் என்பதுதான் அவளது பெரும் ஏக்கம்?
சுட்டித்தனமும், கெட்டித்தனமும் கொண்ட றஜிதாவுக்கு தனது அப்பா கம்பிகளுக்குள் இருந்து விரைவாக வெளியில் வரவேண்டும் என்பதுதான் இப்போதுள்ள ஒரேயொரு ஆசை. கடவுள் தனக்கு முன் தோன்றினாள் அதனையே வரமாக கேட்பதாகவும் சொல்கிறாள். றஜிதாவின் அக்கா வேனுஜா தரம் ஒன்பதில் கல்வி கற்கின்றாள் நிலைமைகளை புரிந்துகொண்டவளாக மனதை பழக்கப்படுத்திக்கொண்டு அமைதியாக காணப்படுகின்றாள்.
றஜிதாவின் தாய் விஜயலட்சுமி ஒரு புறம் குடும்ப பொருளாதாரத்திறகும், பிள்ளைகளின் கல்வி செலவுக்குமான போராட்டம், மறுபுறம் தனது கணவனை விடுதலைசெய்வதற்கான முயற்சிகளும் போராட்டங்களும் என அவரது நாட்கள் நகர்கின்றது.
குடும்பத்தின் பொருளாதாரம் மிகவும் நெருக்கடியான சூழலுக்குள் கானப்படுகிறது., 2015 ஆண்டு ஒரு வருடமும் அருட்தந்தையர்கள் சிலரின் உதவிகள், அத்தோடு விஜயலட்சுமியின் அக்காவின் முடிந்தளவுக்கான உதவி. அக்காவின் கணவர் மேசன் வேலை செய்கின்றவர் அந்த வருமானத்தில் தனது குடும்பத்தோடு, இவர்களும் உதவுகின்றார். ஜசிஆர்சி நிறுவனம் 41 நாளுக்கு ஒரு தடவை 4920 ரூபா வழங்குகின்றது. இதனை தவிர வேறு எந்த பொருளாதார வழிகளும் இல்லை.எனவே ஒரு நெருக்கடியாக பொருளாதார சூழலுக்குள் கணவனுக்காக ஏங்கும் மனைவி,அப்பாவுக்காக ஏங்கும் பிள்ளைகள் என காலம் கடந்து செல்கிறது. எந்த தீர்வும் இல்லை.
ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு உதவியவர்கள், உதவியதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் யுத்தம் முடிந்து ஆறு வருடங்களை கடந்த நிலையிலும் அரசியல் கைதிகளாக விடுதலை இன்றி உள்ளனர். பல போராட்டங்கள் உறுதி மொழிகள் ஜனாதிபதி, பிரதமர் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலராலும் வழங்கப்பட்டு விட்டது எந்தப் பயனும் இல்லை என விரக்கத்தியில் தனது உள்ளக் குமுறல்களை கொட்டினார் விஜயலட்சுமி.
வழக்கு வழக்கு என தவணைகள் போய்க்கொண்டிருக்கிறது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை, இப்போது வழக்கு பேசுவதற்கு சட்டத்தரணிகள் மூன்று இலட்சத்திற்கு மேல் பணம் கேட்கின்றனர் நான் என்ன செய்வது? என்கிறார் விஜயலட்சுமி.
‘தன்னை கொலை செய்ய வந்தவருக்கே பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த ஜனாதிபதி எனது அப்பா போன்று சிறையில் இருக்கும் பலருக்கு விடுதலை அளிக்க உதவ வேண்டும். ஜனாதிபதி என்னை போன்ற அப்பாவின் அன்புக்கும், அப்பா இல்லாது தவிக்கும் குழந்தைகளின் நிலையை உணர்ந்து விடுதலை செய்ய வேண்டும்’ என்கிறாள் றஜிதா.
நாங்கள் அப்பா,அம்மா, அக்கா எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிட வேண்டும், ஒன்றாக கோயிலுக்கும் கடற்கரைக்கும் போகவேண்டும், எல்லோரும் சேர்ந்து பொங்கல் கொண்டாட வேண்டும் என்று நிறையவே ஆசைகள் உண்டு ஆனால் அந்த ஆசைகள் எல்லாம் எப்போது நிறைவேறும் என்றுதான் தெரியவில்லை என உருக்கமாக சொல்லி முடித்தாள் றஜிதா
றஜிதா தனது அப்பாவுடன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே எங்கள் உள்ளங்கள் உருகிவிடும் போல் இருந்தது ஒரு ஒன்பது வயது பிஞ்சு உள்ளம் தந்தையை பிரிந்து தவிப்பது எம்மால் தாங்கிக்கொள்ள முடியாதிருந்தது.
றஜிதா போன்று எத்தனை எத்தனை ஈழத்துக் குழந்தைகள் தங்களது அப்பாக்களை சிறைக்குள் தொலைத்துவிட்டு தவிக்கின்றார்கள்? இவர்களுக்கு எப்போது விடிவு?
மு.தமிழ்ச்செல்வன்
GTN