“சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தனிப்பட்ட ரீதியில் குற்றங்கள் எதுவும் செய்யவில்லை. பொதுவான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதனால்தான் அவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை விடுவித்தது போன்று அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளையும் உடன் விடுவிக்க ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – இவ்வாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
நல்லாட்சி அரசு தங்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதிலுமுள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றுமுன்தினம் திங்கட்கிழமையிலிருந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் கைதிகளின் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இந்த அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதேவேளை, அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்றும், சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுதலைசெய்வது தொடர்பான பொறுப்பு நீதி அமைச்சுக்கு உரியது அல்ல என்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியுள்ள கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ள இந்த வேளையில் நீதி அமைச்சரின் இவ்வாறான கருத்து கைதிகளுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் மனவருத்தத்தைத் தரும் விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தான் அவசரமாக நீதியமைச்சரை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாகவும், இந்தப் பேச்சில் தீர்வு எட்டப்படாவிட்டால் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்துப் பேச்சு நடத்தி உரிய தீர்வைக் காணவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.