இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.
இறுதி நாளான நேற்று சுழலும் ஆடுகளத்தில் 136 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இலங்கையின் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்களுக்குள் சுருண்டு மடங்கியது.
இதனால் இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றியைத் தனதாக்கியது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் 5 விக்கெட்டுக்களும் 36 ஓட்டங்களுக்குள் வீழ்தப்பட்டன. அதன் பின்னர் ஹரீஸ் சொஹைல் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 34 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்தார். அதன் பின்னர் ஹேரத்தின் சுழல் மாயாஜாலத்திற்கு ஈடுகொடுக்க முடியாத பாகிஸ்தான் அணி 114 ஓட்டங்களுக்குள் மடங்கியது.
இலங்கை சார்பாக பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 6 விக்கெட்டுக்களையும் தில்ருவான் பெரேரா 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.
ரங்கன ஹேரத் கைப்பற்றிய 6 விக்கெட்டுக்களுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதலாவது இடதுகை சுழல் பந்துவீச்சாளராக வரலாறு படைத்தார். அத்தோடு வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்கெதிராக 100 டெஸ்ட் விக்கெட்டுக்களை முதலாவது வீரராக சாதனை படைத்தார்.
முன்னதாக நாணயச்சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து மொத்தமாக 419 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் சந்திமால் ஆட்டமிழக்காமல் 155 ஓட்டங்களையும், கருணாரத்ன மற்றும் டிக்வெல முறையே 93, 83 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் அபாஸ் மற்றும் யசிர் ஷா தலா மூன்று விக்கெட்டுக்களை எடுத்தனர்.
தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 422 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியை விட 3 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில், அசார் அலி, ஹரிஷ் சொஹைல், மசூட் மற்றும் சமி அஸ்லாம் முறையே 85, 76, 59, 51 ஓட்டங்களைக் குவித்தனர்.
பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுதாடக் களம் புகுந்த இலங்கை அணி 138 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இலங்கை சார்பாக டிக்வெல்ல ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக யசீர்ஷா 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டார்