“நீண்டகாலமாகத் தொடரும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளும் வகையிலான நிலையான தீர்வு காணப்பட்டால் மாத்திரமே முழுமையான அபிவிருத்தி சாத்தியமாகும்” என்று வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கனடா பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
கனடா நாட்டின் ஆசிய பசுபிக் பிராந்திய அபிவிருத்திக்குப் பொறுப்பான பணிப்பாளர் நாயகம் ஜெவ் நன்கிவெல் தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை (13.03.2014) அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
சந்திப்புத் தொடர்பாக அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கனடாக் குழுவினரிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
இச்சந்திப்புக் குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“வடமாகாணத்தில் கடந்த ஆண்டில் கனடா நாட்டின் நிதியுதவியுடன் விவசாயத் துறையிலும், கால்நடை அபிவிருத்தித் துறையிலும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பாகவும், இனிமேலும் கனடா இத்துறைகளில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்வதே சந்திப்பின் நோக்கமாக இருந்தது.
கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாகத் திணைக்களப் பணிப்பாளர்கள் விளக்கியபோது கனடாக்குழுவினர் திருப்தி தெரிவித்திருந்தார்கள். எனினும் இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முழுமையான, நிலையான அபிவிருத்தியாக அமையப்பெறுவதில் வடக்கில் நிலைகொண்டிருக்கும் படையினர் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை அவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன்.
வளமான விவசாயப் பூமியான வலிவடக்கைப் பொதுமக்களிடம் இருந்து இராணுவம் அபகரித்து வைத்திருப்பது தொடங்கி எமது மாகாணத் திணைக்களங்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் படையினர் ஆக்கிரமித்து வைத்திருப்பதுவரை அவர்களிடம் புள்ளிவிபரங்களுடன் தெரியப்படுத்தியுள்ளேன்.
இலங்கையில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்டது என்றரீதியில் வடக்கின் அபிவிருத்தியில் தாங்கள் கூடுதல் அக்கறை காட்டிவருவதாகத் தெரிவித்த கனடா குழுவினர், தொடர்ந்தும் உதவத் தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளனர். அத்தோடு, நான் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகக் கனடா நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன் அமைச்சின் செயலாளர் யு.எல்.எம். ஹால்தீன், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசீகரன் உட்படத் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.