அபிவிருத்தி இன்மையினாலேயே களத்திற்கு வந்தோம் : சுயேட்சை வேட்பாளர்.

முப்பது ஆண்டுகளாக எந்தவொரு அரசியல் கட்சிகளும் அபிவிருத்தியை முன்னெடுக்காததால், சுயேட்சையாக எமது மண்ணை அபிவிருத்தி செய்வோம் என கேடயம் சின்னத்தினை கொண்ட சுயேட்சைக் குழுவின் முதன்மை வேட்பாளர் க.கேதீஸ்வரநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பாடி விருந்தினர் விடுதியில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். .

மேலும் அவர் கூறுகையில், “கடந்த காலங்களில் நெடுந்தீவிற்கான அபிவிருத்திகள் சரியான வகையில் முன்னெடுக்கப்படவில்லை. நெடுந்தீவு இன்னும் பின்தங்கிய பிரதேசமாகவே காணப்படுகின்றது. வெளிநாடுகளைப் போன்று அடிப்படை வசதிகளுடன் வாழ வேண்டுமென்று தீவகம் சுபீட்சமான எதிர்காலத்தினை அடையும் வரை நாம் பயணிக்கவுள்ளோம்.

அரசியல்வாதிகள் முக்கிய பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும். அபிவிருத்தியை நடைமுறைப்படுத்த வேண்டிய மாகாண சபை கூட அக்கறை காட்டவில்லை. அனைத்துப் பிரச்சினைகளையும் அதிகாரிகளிடம் முன்வைத்த போதும் பதில் எதுவும் கிடைக்கவில்லை.

நெடுந்தீவு மண்ணில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. வீதிப் போக்குவரத்து மற்றும் கடற்போக்குவரத்து நிரந்தரமான போக்குவரத்தாக அமைவதில்லை. மீனவர் மற்றும் படகுகள் பிரச்சினை, கல்வி வளர்ச்சி பாதிப்பு, நெடுந்தீவு மக்களுக்கு தகுந்த ஊக்குவிப்புக்கள் இல்லை. வைத்தியர் ஒருவர் பல சிரமத்தின் மத்தியில் கடமையாற்றுகின்றார். நிரந்தர வைத்தியர் என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே தேர்தலில் போட்டியிடுகின்றோம். கேடயம் சின்னத்தில் 16 பேர் கொண்டு சுயேட்சையாகப் போட்டியிருக்கின்றோம். பதவிக்கு வந்தால், மூன்று வருடங்களில் எமது பிரதேசத்தினை அபிவிருத்தி செய்வோம்” என தெரிவித்தார்.

Related Posts