அபிவிருத்தியும் அரசியலுரிமையும் எமது கண்கள் – டக்ளஸ்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தியை மட்டுமல்லாது மக்களுக்கான அரசியல் உரிமைகளும் வென்றெடுக்கப்பட வேண்டுமென்பதே எமது முக்கிய நோக்கமாகும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

fisher 3

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் நேற்று(31) இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதி மக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களது நலன்சார்ந்த செயற்றிட்டங்களை அரசின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைவாக செயற்படுத்தி வருகின்றோம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் தவறுகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை தீர்த்து வைப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

ஓவ்வொரு மனிதனதும் அடிப்படை உரிமைகள் என்பது அவர்களுக்கே உரித்தானவை.

கடந்தகால அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தல்களினால் எமது மக்கள் முள்ளிவாய்க்கால் வரை செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் நடைமுறைச்சாத்தியான வழிமுறையில் தான் எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்பதை நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம்.

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவின் கீழ் ஏற்கெனவே நாம் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

எமது நோக்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளப்புனரமைத்து அபிவிருத்தி செய்வது மட்டுமல்ல. அதற்கும் மேலாக அரசியல் உரிமைகளையும் வென்றெடுப்பதேயாகுமென்பதுடன் அபிவிருத்தியும் அரசியலும் எமது இரு கண்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், எதிர்காலத்தில் எமது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மக்கள் முழுயைமான ஆதரவும் ஒத்துழைப்பும் தரும் பட்சத்திலேயே சாத்தியமாகும்.

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகள் சுனாமியால் மட்டுமல்லாது யுத்தத்தினாலும் பல்வேறு பாதிப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்திருந்த நிலையில் இவற்றை அபிவிருத்தியால் கட்டியெழுப்ப வேண்டியது முக்கிய கடப்பாடாகும்.

இதன்பொருட்டே நாம் இணக்க அரசியல் ஊடாகவும் அரசுடனான நல்லுறவையும் கொண்டு அபிவிருத்திகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.

முக்கியமாக மக்களது நீதியான நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து திட்டங்களை வகுத்து அவற்றை துறைசார்ந்தோர் ஊடாக நடைமுறைப்படுத்தியும் வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதயன், மருதங்கேணி பிரதேச செயலர் திருலிங்கநாதன், ஈ.பி.டி.பியின் சர்வதேச இணைப்பாளர் மித்திரன், ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் ரங்கேஸ்வரன் கலந்துகொண்டனர்.

Related Posts