அபிவிருத்தித் திட்டங்களுக்கு வட.மாகாண அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை: மனோ

வட.மாகாணத்தில் முன்னெடுக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களிற்கு வடக்கிலுள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்பு போதவில்லை என அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை வடக்கில் முன்னெடுக்க முயற்சித்தபோதும் வடமாகாண சபையினரும் தகுந்த ஒத்துழைப்பை தமக்கு வழங்கவில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டினார்.

வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சின் செயலாளர் ஆர்.தென்னக்கோன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு, அமைச்சினூடாக வடக்கில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் மனோகணேசன் ஆராய்ந்தார்.

இதன்போது, வட்டுக்கோட்டை பாடசாலை ஒன்றில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தினை கல்வி அமைச்சு சரியான முறையில் நடைமுறைப்படுத்த தவறியமை தொடர்பாக எழுந்த பிரச்சினையின் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிற்குமாக எண்ணூற்றி ஐம்பது மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு தமது அமைச்சினூடக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்கான திட்ட முன்மொழிவுகளை விரைவுபடுத்தி தமது அமைச்சிற்கு அனுப்பி வைக்குமாறு ஐந்து மாவட்டங்களின் அரச அதிபர்களையும் அமைச்சர் மனோ கணேசன் இதன்போது கேட்டுக்கொண்டார்.

Related Posts