உரிய அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மக்கள் நலன்கருதி முறையாக செலவளிப்பது அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடக்கில் அமுலாகும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் எதிர்கால திட்டங்கள் போன்றவை பற்றி ஆராயும் நோக்கில் யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.
வட மாகாணத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் 2017 ஆம் ஆண்டில் வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி செலவிடப்படும் விதம் தொடர்பாக இதன்போது அதிகாரிகளிடம் விசாரித்த ஜனாதிபதி, உரிய அபிவிருத்தி திட்டங்களின் மூலமாக அந்த நிதியை மக்களின் நன்மை கருதி உரிய முறையில் செலவிடுதல் அரசியல் பிரதிநிதிகளினதும் அதிகாரிகளினதும் பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார்.
யாழ் மாவட்டத்தின் பெருந்தெருக்கள், சுகாதாரம், கல்வி மற்றும் குடிநீர் உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வசதிகளின் குறைபாடுகள் தொடர்பாக இதன்போது கண்டறிந்த ஜனாதிபதி குறைபாடுகளை துரிதமாக நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன் மீள் குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடப்பட்டது.
வீடுகளை நிர்மாணிப்பதற்காக மணலைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக இதன்போது அரசியல் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியதுடன், சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு உரிய இடங்களில் மணல் மற்றும் கற்களை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு தான் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இதற்காக ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர், சூழல் அதிகார சபை, வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன சீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமித்து எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் அந்த விடயத்தை முடிவுக்கு கொண்டுவர தான் ஆலோசனை வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுநர் ரெஜினோல்ட் குரே, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம்.சுவாமிநாதன், துமிந்த திசாநாயக்க யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
இக் கலந்துரையாடலின் பின்னர் யாழ் மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி , காணாமற் போனோரின் பெற்றோர்களுடனான சந்திப்பிலும் ஈடுபட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் காணாமற் போனோரின் பெற்றோர் குழுவொன்று இந்த சந்திப்பில் ஈடுபட்டதுடன், தமது பிள்ளைகளை தேடித் தருமாறு கோரும் கடிதமொன்றையும் இவர்கள் இதன்போது ஜனாதிபதியிடம் கையளித்தனர்.