Ad Widget

அபாயகரமான ஆயுதங்களுடன் கைதான பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமறியல்

இணுவில் முதலிகோயில் பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு அபாயகரமான ஆயுதங்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள் ஒன்பது பேரையும், எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் ரி.கருணாகரன், நேற்று புதன்கிழமை (20) உத்தரவிட்டார்.

குழு மோதல் ஒன்றுக்கு மேற்படி மாணவர்கள் இணுவில் பகுதிக்கு வந்திருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய பறக்கும் படையினருக்கு இரகசியத் தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து, சிவில் உடையில் சென்ற பொலிஸார், காயங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் கைக்கோடாரி, கத்தி, இரும்பு மற்றும் கொட்டன்கள் என்பவற்றை மீட்டதுடன், மாணவர்களையும் கைது செய்திருந்தனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்தின் பிரபலக் கல்லூரிகளில் கல்வி கற்கும் உயர்தர மாணவர்கள் எனப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

தனிப்பட்ட காரணம் ஒன்றுக்காக, பழிவாங்கும் நோக்கத்தோடு இணுவில் பகுதியிலுள்ள மாணவர்கள் சிலரைத் தாக்கும் வகையில் இவர்கள் அங்கு சென்றுள்ளனர். அத்துடன், இவர்களின் மோட்டார் சைக்கிள் ஒன்றும் துவிச்சக்கரவண்டிகள் மூன்றும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

கைதான மாணவர்கள் ஒன்பது பேரும் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, நேற்று புதன்கிழமை (20) மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவத்துடன் வேறு மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பில் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Posts