இலங்கைத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “நுட்பம்’ மாநாடு கடந்த சனிக்கிழமை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.45 மணி வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் விரிவுரையாளர்களும், பார்வையாளர்களும் வருகை தந்ததோடு அனைத்து தரப்பினருக்கும் இது பயனுள்ள ஒன்றாக அமைந்திருந்தது
காலை 9 மணியளவில் ஆரம்பமாகிய இவ் நிகழ்வில் தமிழர் பண்பாட்டு முறைப்படி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் வரவேற்பு நடனம் என்பன பார்வையாளர்களை மிகவும் கவர்ந்ததாக அமைந்ததோடு அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது.
இம் மாநாட்டில் தமிழ் தொழில்நுட்ப பயன்பாடுகள், கையடக்க சாதனங்களில் தமிழ், தமிழ் இணையத்தள முகவரிகள், தமிழ் OCR, சமூக வலைத்தளப் பாதிப்புக்கள், தீர்வுகள், இலங்கையில் கணினி தொடர்பான குற்றங்களும் அதற்கான தண்டனைகளும், மல்டிமீடியா மற்றும் மின் வணிகம் உட்பட பல்வேறு தலைப்புகளில் மூன்று அமர்வுகளாக கருத்துரைகள் இடம் பெற்றன.
இந்த மாநாட்டில் “இலங்கையில் தகவல் தொழில்நுட்ப தொழிற்றுறை யாழ்ப்பாணத்தின் வகிபாகம்’ என்னும் தலைப்பில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும், இலங்கை ஆள்கள் பெயர் பதிவு நிறுவனத் தலைவருமாகிய பேராசிரியர் ஜிகான் டயஸ் சிறப்புரையாற்றினார்.
நுட்பம்-தமிழ் தகவல் தொழில்நுட்ப அமையமானது,2011ஆம் ஆண்டு முதல் தமிழில் தகவல் தொழில்நுட்பம் வளர்த்தல், தகவல் தொழில்நுட்பம் ஊடாக தமிழ் வளர்த்தல், தமிழ் தகவல் தொழில்நுட்பவியலாளர்களை ஒன்றிணைத்தல், தமிழ் மொழியின் ஊடாக சகல தமிழ் மக்களுக்கும் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்ள வழிசமைத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.