சகல வகைகளையும் சேர்ந்த முழுமையான பீடைக்கொல்லிகளை நாட்டுக்கு இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்தலை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடைசெய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
நச்சுத்தன்மையற்ற உணவுகளைப் பெற்றுக்கொடுத்து நாட்டு மக்களை சுகதேகிகளாக ஆக்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பீடைக்கொல்லி, கிருமிநாசினி மற்றும் இரசாயன பொருட்களை அதிகளவு பயன்படுத்துவதன் காரணமாக மக்களின் சுகாதார நிலைமைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பாக அமையும் பீடைக்கொல்லியான கிளைபோசிட் பீடைக்கொல்லியை இந்நாட்டிற்கு இறக்குமதி செய்வதை தடைசெய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும் கிளைபோசியேட் அமோனியம் என்ற இரசாயன பீடைக்கொல்லி பல்வேறு வர்த்தக நாமங்களின் கீழ் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்தல் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி எல்லா வகையான முழுமையான பீடைக்கொல்லிகளினதும் இறக்குமதியை தடைசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.