அனைத்து பிரச்சினைகளுக்கம் காரணம் வடக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னமே – பொ.ஐங்கரநேசன்

Ainkaranesanவிவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து ஆற்றியஉரை முழுவடிவம்

கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ முதல்வர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ உறுப்பினர்களே, யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவருமான கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களே, மதிப்பிற்குரிய திணைக்கள அதிகாரிகளே, ஊடகவியலாளர்களே உங்கள் அனைவருக்கும், எங்கள் எல்லோரையும் இயக்குவித்துக்கொண்டிருக்கும் இயற்கை என்னும் பேரன்னைக்கும் என் வணக்கங்களை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
வடக்குமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் 2014 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான விவாதத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக, எனது அமைச்சுக்கு உட்பட்ட துறைகளின் இன்றைய நிலை பற்றி கௌரவம் மிக்க இந்தச் சபையில் மேலோட்டமாகவேனும் வெளிப்படுத்துவது அவசியமாகும்.

வடக்குமாகாணம் அதன் பொருளாதாரத்தைக் காலங்காலமாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டி வளர்த்து வந்துள்ளது. ஆனால், இன்று அந்த விவசாயம் சீர்குலைந்துள்ளது. வடக்கின் எல்லைப்புறங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் முதல் இங்கே காங்கேசன்துறைவரை பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அளவுள்ள வளங்கொழிக்கும் விவசாய பூமி அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களுக்கெனவும் படைமுகாங்களுக்கெனவும் அபகரிக்கப்பட்டுள்ளது. போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கழிந்த பின்பும்கூட இந்த நிலங்களை மீளப்பெறுவதற்காக ஏதிலிகளாக்கப்பட்ட இந்த மண்ணின் உரிமையாளர்கள் எவ்வளவோ போராட்டங்கள் நடாத்தியும் மத்திய அரசு இசைந்து கொடுப்பதாக இல்லை.

பொதுமக்களின் விளைநிலங்கள் மாத்திரம் அல்ல, வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு உரித்தான நிலங்கள்கூட படைத்தரப்பினர் வசம் உள்ளன. வட்டக்கச்சி விதை உற்பத்திப்பண்ணை, இரணைமடு சேவைக்காலப் பயிற்சி நிலையம், கனகராயன் குளம் தாய்த்தாவரப் பண்ணை, புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் உப அலுவலகம், மன்னார் விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் என்று 400 ஏக்கர்களுக்கும் அதிகமான பரப்பளவு படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஆய்வுகளையும், பயிற்சிகளையும், விதைதானிய உற்பத்திகளையும் செய்து எமது விவசாயப் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பங்காற்றி வந்த இந்த நிலப்பரப்பும் நிலையங்களும் படையினர் வசம் இருப்பது எமது விவசாய அபிவிருத்திக்குப் பெருந்தடையாகவே அமைந்துள்ளது.

எமது விவசாயிகள் தங்களது நிலங்களில் இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுகின்ற அதே சமயம், இந்நிலங்களின் பல இடங்களில் படையினர் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமது உற்பத்திகளைச் சந்தைக்குக் கொண்டுவருகின்றனர். இதனால் விளைநிலங்கள் அபகரிப்பு என்பதற்கும் அப்பால், சந்தைப்போட்டியிலும் எமது விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். படைத்தரப்பின் இந்நடவடிக்கைகள் வடக்கின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயத்தைத் திட்டமிட்டு முடக்கும் அல்லது சீர்குலைக்கும் நிகழ்ச்சி நிரலாகவே எண்ணத்தோன்றுகிறது. இவற்றை மீட்டெடுக்காவிடின் எமது உணவுத் தேவைகளுக்கு தம்புள்ள மரக்கறிகளையே முற்றுமுழுதாக நம்பியிருக்க வேண்டிய துப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்படலாம்.

அவைத்தலைவர் அவர்களே!

படைத்தரப்பு எமது நிலங்களில் பயிர்செய்து கொண்டு மாத்திரம் இருக்கவில்லை. வன்னியில் எமது பசுக்களில் பால் கறந்து கொண்டும் இருக்கிறார்கள். மன்னர்கள் ஒரு நாட்டின் மீது போர் தொடுக்கும்போது அந்நாட்டின் ஆநிரைகளைக் கவர்ந்து செல்வார்கள் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் படித்திருப்போம். இங்கும் அது நடந்திருக்கிறது. கால்நடைவளர்ப்புக்குப் பிரசித்தி பெற்ற வன்னிப் பெருநிலப்பரப்பை இராணுவம் கைப்பற்றி, மக்களை இடைத்தங்கல் முகாங்களுக்கு அனுப்பிய பின்னர் அவர்கள் செய்த பிரதான வேலைகளில் இந்த ஆநிரை கவர்தலும் ஒன்றாக இருக்கிறது. வன்னியின் நல்லினப் பசுக்களையும, காளைகளையும், ஆடுகளையும் தங்கள் படைத்தளங்களுக்கு கொண்டு சென்ற படையினர் மக்கள் மீள்குடியேறிய பின்னர் அவற்றை முழமையாகக் கையளிக்கவில்லை. முத்தையன்கட்டில் பண்ணை அமைத்துப் பால் கறந்து நெஸ்லே நிறுவனத்துக்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் இங்கு சுட்டிய பிரச்சினைகளுக்கு வடக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னமே காரணம் என்பது வெள்ளிடைமலை. போருக்காகப் பெருமளவு தென்இலங்கை இளைஞர்களையும் யுவதிகளையும் படைகளில் உள்ளீர்த்த இலங்கை அரசாங்கம் போர் முடிந்த பின்னர் அவர்களை வைத்து என்ன செய்வதென்றறியாது மரக்கறி வியாபாரம், பால் வியாபாரம் தொடங்கிப் பலசரக்கு வியாபாரம் வரை ஈடுபடுத்துகிறது.

படையினர் வசம் எமது விளைநிலங்களும், கால்நடைகளும் இருக்கும்போது எமது மக்களுக்கு வெங்காயவிதைகளையும், ஆடு மாடுகளையும் வாங்கி வழங்குவது மட்டும் விவசாய, கால்நடை அமைச்சின் கடமையாகாது. அதை மாத்திரம்தான் செய்வதெனின் அதற்கு மாகாணசபை தேவையில்லை. அதற்கென ஏராளமான அரசசார்பற்ற நிறுவனங்கள் இங்கே உள்ளன. அந்த வகையில் எமது விளைநிலங்களை ஆக்கிரமித்து இருக்கும் படையினர் விலக வேண்டும் என்று இந்தக் கௌரவ சபையில் அழுத்திக் கோருவதோடு, இது தொடர்பாக மாகாணசபை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
எமது விவசாய நிலங்களின் வளத்தைக் கருவறுத்ததில் எங்களின் கரங்களும் பங்கேற்றுள்ளன, பங்கேற்றுக்கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் கவலையுடன் நினைவிற் கொள்ள வேண்டியுள்ளது. குறைந்த நிலப்பரப்பில் கூடிய விளைச்சலை அறுவடை செய்வதற்காக எமது மரபார்ந்த விவசாய முறைகளைக் கைவிட்டுச் செறிவு வேளாண்மைக்கு (intensive agriculture) மாறினோம். துலாவையும் பட்டையையும் கைவிட்டு பம்பிகளினால் தேவைக்கும் மேலதிகமாக நிலத்தடி நீரை நாள்தோறும் வெளியேற்றிக் கொண்டிருக்கிறோம். அளவுக்கும் அதிகமாக இரசாயன உரங்களையும், பீடை கொல்லி நஞ்சுகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நிலத்தடி நீரை நஞ்சேற்றிக் கொண்டிருக்கிறோம். குடாநாட்டின் பல இடங்களில் குடிநீரில் நைத்திரேற்றின் செறிவு உலக சுகாதார நிறுவனம் அனுமதித்திருக்கும் அளவைவிட உயர்வாக இருக்கிறது. குடிநீருடன் உடலினுள் செல்லும் நைத்திரேற்று உள்ளே நைத்திரைற்று என்னும் புற்றுநோய்த் தூண்டியாக மாறுகிறது. இந்த இடத்தில் சில தரவுகளை உங்களுக்குத் தெரியப்படுத்துவது அவசியம் என்று கருதுகி;றேன். இலங்கைத் தீவில் இஸ்லாமியர்களை விட சிங்களவர்களும், சிங்களவர்களைவிட தமிழர்களும் கூடியளவில் புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். தமிழர்களிலும் யாழ் குடாநாட்டுத் தமிழர்களே அதிகம் புற்றுநோய்க்கு ஆளாகின்றார்கள்.

அதுவும் தொண்டை, களம், இரைப்பை என்று உணவுக்குழாய்ப் புற்றுநோய்களே அதிகம். இதற்கு நாம் அதிக அளவிலான இரசாயன உரங்களையும் பீடைகொல்லிகளையும் பயன்படுத்துவதே முதன்மைக் காரணமாக உள்ளது. இதில் வேதனை என்னவென்றால் எமது விவசாயிகள் களைகொல்லிகளையோ, பீடைகொல்லிகளையோ அவற்றின் தீங்குகள் பற்றி அறிந்து கொள்ளாதவர்களாகவே பயன்படுத்தி வருகின்றனர் என்பதுதான். யாழ் குடாநாட்டில் விவசாயிகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு களஆய்வில், பல விவசாயிகள் வீட்டுப் பாவனையில் உள்ள பாத்திரங்களிலும், கிணறுகளில் தண்ணீர் அள்ளும் வாளிகளிலும்கூட இந்த நச்சு இரசாயனங்களைக் கலந்து பயன்படுத்துகிறார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை தெரிய வந்துள்ளது. பீடைகொல்லி மருந்துகளின் கடைசித் தெளிப்பு அறுவடைக்கு இரண்டு வார காலத்துக்கு முன்பாக இருக்க வேண்டும் என்பதுதான் நியதி. ஆனால், ஆய்வுக்கு உட்படுத்திய விவசாயிகளில் 17 விழுக்காடு விவசாயிகள் மாத்திரமே இந்த விதிக்கு மதிப்பளிக்கின்றனர். அநேகமானோர் அறுவடைக்கு முதல் நாள் மருந்துகளை விசிறிப் பீடைநாசினிகளின, நாசிகளைத் துளைக்கும் நெடியுடன்தான் உற்பத்திகளைச் சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள். நாங்கள் சாதாரணமாக உள்ளெடுக்கும் மருந்துகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரைச்சீட்டு;கள் தேவைப்படும் போது கொடிய நஞ்சுகளான பீடைகொல்லி நஞ்சுகளை மட்டும் விரும்பிய ரகங்களில் விரும்பிய அளவில் கொள்வனவு செய்து எவரும் பயன்படுத்தக்கூடிய நிலையே நிலவுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் ‘பயிர்ச் சிகிச்சை’ (crop clinic) முகாம் ஒன்றை நடாத்த ஆரம்பித்துள்ளது. நடமாடும் இந்தப் பயிர்ச் சிகிச்சை முகாமுக்கு விவசாயிகள் தங்கள் நோயுற்ற பயிர்களின் மாதிரிகளை, மண் மாதிரிகளை எடுத்துவந்து காட்டி நோய்களை அடையாளம்கண்டு, பொருத்தமான பீடைகொல்லியையும் பயன்படுத்த வேண்டிய சரியான அளவையும் அறிந்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி, விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரை இருந்தால் மாத்திரமே பீடைகொல்லி நஞ்சுகளைக் கொள்வனவு செய்யலாம் என்ற நிலைக்குப் பீடைகொல்லி வாணிபத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.

கௌரவ அவைத் தலைவர் அவர்களே,

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் நாம் சென்று விவசாயிகளுடனும் கால்நடை வளர்ப்பாளர்களுடனும் கலந்துரையாடியபோது சந்தைப்படுத்தல் பிரச்சினைகளே அவர்களின் முதல் முறைப்பாடாக இருந்தது. விவசாயிகள் சந்தைகளுக்குக் கொண்டு செல்லும் உற்பத்திகளில் 10 விழுக்காடு அளவை விற்பனையாளர்களுக்குக் கழிவாகக் கொடுக்க வேண்டியுள்ளது. அதாவது 100 கிலோ உருளைக்கிழங்கை அவர் சந்தைக்குக் கொண்டு சென்றால் 90 கிலோவுக்கே அவருக்குப் பணம் வழங்கப்படுகிறது. அதே சமயம் சந்தைக் குத்தகைக்காரர் விவசாயிகளிடம் 100 கிலோவுக்குமான வரியை அறவிட்டு வருகிறார். இந்த வரியினது விழுக்காடும் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுகிறது. விவசாயிகள் இவற்றை முறைப்பாடுகளாகத் தெரிவித்ததையடுத்து உள்ள 10 உள்ளுராட்சிசபைத் தவிசாளர்களையும் செயலாளர்களையும் பல்வேறு திணைக்கள அதிகாரிகளையும் அழைத்துக் கலந்துரையாடினோம். இதில், எதிர்வரும் 2014 தை முதலாம் திகதியில் இருந்து இக் கழிவு நடைமுறை முற்றாக இல்லாமல் செய்யப்படுகிறதென்றும் குத்தகைக்காரர் வசூலிக்கும் வரி உச்சபட்சமாக 4 விழுக்காடுக்கு மேற்படக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இம்முடிவு அமைச்சரவை வாரியத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. அத்தோடு சிறு விவசாயிகள் தங்கள் உற்பத்தியை நேரடியாகவே நுகர்வோரிடம் விற்பனை செய்ய விரும்பின் சந்தைகளில் அவர்களுக்கெனவும் ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்து கொடுக்குமாறும் கோரியுள்ளோம்.

உற்பத்திகளை அறுவடை செய்த அதே நிலையில் விற்பனை செய்வதை விட, மதிப்புக் கூட்டிய பொருட்களாக விற்பனை செய்யும் போது வடக்கைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்த முடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். உதாரணத்துக்குக் குறிப்பிடுவதாக இருந்தால், வடக்கில் இருந்து தினமும் 14,000 இலிற்றர் பாலை நெஸ்லே நிறுவனமும் 5,000 இலிற்றர் பாலை மில்க்கோ நிறுவனமும் எடுத்துச் செல்லுகின்றன. பின்னர் நமது பாடசாலை மாணவர்களுக்கு கல்வித் திணைக்களம் அதிக அளவு பணம் கொடுத்து தூவி உலர்த்திய மாவாகப் பாலை வாங்கிக் கொடுத்து வருகிறது. எமது பாற்பண்ணையாளர்கள் பால் உற்பத்தியை நேரடியாகவே பாடசாலைகளுக்கு விநியோகித்தால் கூடுதல் வருவாயைப் பெற முடியும். ஆனால், பாடசாலைக்கு விநியோகித்தால் சனி, ஞாயிறு தினங்களிலும், பாடசாலைத் தவணை விடுமுறைகளின்போதும் பாலை அவர்களால் சந்தைப்படுத்த இயலாமற் போய்விடும். இதனாலேயே, அந்நாட்களில் எஞ்சக்கூடிய பாலைக் கட்டிப்பாலாகவோ, யோகெட்டாகவோ, வெண்ணெயாகவோ, வெண்ணெய்க் கட்டியாகவோ தரமுயர்த்தக்கூடிய நிலையங்களை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளோம். அண்மையில் எமது கால்நடை அபிவிருத்தித் திணைக்களம் பூநகரியில் இவ்வாறானதொரு நிலையத்தைத் திறந்து வைத்துப் பாலைக் கொள்வனவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதனைச் சிறிய அளவிலான, அல்லது பரீட்சார்த்த முயற்சி என்றே சொல்லலாம். இவ்வாறான பதனிடும் மற்றும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் வசதிகளை நாம் சகல பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டியவர்களாக உள்ளோம்.

வடக்கின் பழச்செய்கையில் கறுத்தக் கொழும்பான் மாம்பழங்களுக்கென முன்னர் தனித்துவமான ஒரு இடம் இருந்தது. ஆனால், அவற்றின் தரமும் உற்பத்தியும் கீழிறங்கிச் செல்வதை இப்போது நாம் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறோம். இலிங்க முறையில் அல்லாது ஒட்டுதல் என்னும் பதியமுறை மூலமே நாம் காலங்காலமாக இவற்றை இனப்பெருக்கி வந்துள்ளதால் வடக்கு மாகாணம் மாத்திரம் அல்ல இலங்கை பூராகவும் உள்ள கறுத்தக் கொழும்பான்கள் எல்லாமே ஏறத்தாழ ஒத்த மரபணு அமைப்பையே கொண்டிருக்கின்றன இதுவே, ஒரு கறுத்தக்கொழும்பான் மரத்துக்கு ஏற்படும் ஒரு நோய் தொற்று நோயாக, கொள்ளை நோயாக எல்லா மரங்களுக்கும் பரவுவதற்கு காரணமாக இருக்கிறது.இதே கதிதான் பிரசித்திபெற்ற எமது எல்லா மாமர வகைகளுக்கும். வடக்கின் குறியீடுகளான இம் மா வகைகளை மீட்டெடுப்பதோடு பொருளாதார ரீதியாக இலாபம் ஈட்டக்கூடிய புதிய மாமர வகைகளைப் புதிதாக அறிமுகப்படுத்த வேண்டியவர்களாகவும் உள்ளோம்.

இன்று பிற மாகாணங்களில் இருந்து எமது பகுதிகளுக்குப் பழமரங்களும்,அலங்காரத் தாவரங்களும் மாத்திரம் அல்லாமல் இறப்பர், சந்தனமரங்களும்கூட விற்பனையாளர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறது. நான் யாழ் பல்கலைக்கழகத்தில் மாமரங்களில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்துக்காக ஆய்வுகளை மேற்கொண்டபோது, இன்னுமொருவர் பப்பாசி மரத்தில் நோய்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள விரும்பினார். இதற்குக் குறிப்பிட்ட ஒரு நோய்தொற்றிய சில பப்பாசிகளைப் பேராதனையில் இருந்து யாழ் பல்கலைக்கழகத்துக்கு எடுத்து வரவேண்டியிருந்தது.அந்நோய் யாழ்ப்பாணத்துப் பப்பாசிகளில் பரவியிருக்கவில்லை. இதானல, நோய் தொற்றிய பப்பாசிகளை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவந்தால் இங்குள்ள பப்பாசி மரங்களுக்கும் புதிதாக அந்த நோய் பரவிவிடக்கூடும் என்ற அச்சம் காரணமாக ஆய்வுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.ஆனால், இப்போது எந்தக் கட்டுபாடுகளும் அற்று, எவ்வித அனுமதியுமின்றித் தாவரங்கள் எடுத்துவரப்படுகின்றன. இது வடபகுதிக்குத் தென்பகுதியிலிருந்து புதிய நோய்களை இறக்குமதி செய்யவும் கூடும். எமது மண்ணுக்குச் சந்தனமரம், இறப்பர்மரம் பொருத்தமானதா என ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லை. இந்நிலையில் இம்மரங்களை அறிமுகப்படுத்துவது எஞ்சியுள்ள எமது நிலங்களையும் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு என்று அபகரிக்கும் திட்டத்தின் முன்னோடியோ என்றும் அஞ்சத் தோன்றுகிறது இதனால் வடக்குக்கு வெளியேயிருந்துவரும் விற்பனையாளர்கள் எல்லோரும் மாகாண விவசாய அமைச்சிடம் உரிய அனுமதி பெற்றே ஈடுபடவேண்டும் என்னு விரைவில் கேட்டுக்கொள்ளப்படவுள்ளார்கள்.

விவசாயத் தேவைகளுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெருமளவுக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்துகிறார்களெனின் கிளிநெச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பெரிதும் குளத்து நீர்ப்பாசனத்தையே நம்பியுள்ளார்கள. இங்கு நாம் சென்றபோது குளங்களைப் புனரமைப்பது தொடர்பாகவே அதிகம் பேசியிருந்தார்கள. மூன்று தசாப்தகாலப் போர் குளங்களைச் சீரழித்திருப்பது ஆச்சரியப்படதக்கதொன்றல்ல

எமது விவசாயிகளினதும் கால்நடை உற்பத்தியாளர்களினதும் தேவைகளை நிறைவு செய்து இத்துறைகளில் சுற்றுச்சூழலைப்பாதிக்காத நிலைத்த அபிவிருத்தியை எட்டுவதற்கு மிகப்பெரும் மூலதனமும் ஆளணியும் தேவையென்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எமது அமைச்சுக்கு 2014ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடில் மீண்டுவரும் செலவாக 580 மில்லியன் ருபாய்களும், மூலதனச் செலவாக 125 மில்லியன் ருபாய்களும் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளன. எமது அமைச்சுக்குட்பட்ட துறைகளுக்குஅனுமதிக்கப்பட்ட ஆளணி 1474 பேர்களாக இருந்தபோதும் தற்போது 1176 பேர்களே பணியில் உள்ளனர். இன்னமும் 298 பணி வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஆனால் மாகாணசபையை நாம் பொறுபேற்கும் முன்னேரே அதற்குள்ள அதிகாரங்களின் இயலும், இயாலாமை குறித்தும் அதற்குள்ள வளங்களின் போதும்,போதாமை குறித்தும் தெரிந்தே வைத்திருக்கிறோம். எனவே சலிப்போ ஏமாற்றமோ கொள்ளாமல் மேலதிக நிதிமூலங்களைக் கண்டடைய வேண்டியவர்களக உள்ளோம் புகலிட நாடுகளில் வாழும் எமது உறவுகளினதும், அரசசார்பற்ற நிர்வனங்களினதும் உதவிகளோடு எமது நம்பிக்கையையும் பெரும் மூலதனமாகக் கொண்டு உழைப்போம் என்று சொல்லி எனது அமைச்சுகளின் பாதீடை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

Related Posts