அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிற்கு ஆதரவு வழங்கவேண்டும் என யாழப்பல்கலைக்கழக முகாமைத்து பீட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேப்பாபுலவு மக்களின் சொந்த நிலத்தை மீட்பதற்கான தொடர் போராட்டம் நேற்று பதினேழாவது நாளாக நடைபெற்றது.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நேற்றய தினம் யாழ்பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் கேப்பாபுலவிற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கேப்பாபுலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு ஏனைய பீட மாணவர்களும் ஆதரவு வழங்கவேண்டும் என முகாமைத்துவ பீட மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
மாதிரிக் கிராமங்களில் கடந்த எட்டு வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வாழ்ந்து வரும் மக்கள், தமது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கேப்பாபுலவு இராணுவ தலைமையகத்திற்கு முன்பாக கூடாராம் அமைத்து பொதுமக்கள் தொடர்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை முள்ளியவளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தபோதும், நேற்றையதினம் போராட்டத்தில் மக்கள் ஈடுபடுவதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.