நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விசேட பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் கொழும்பு கல்கிசை நீதிமன்றில் இருந்து சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி இரண்டும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.
இதன் காரணமாக, சுமார் மூன்று மணிநேரம் நீதிமன்ற செயற்பாடுகளும் சோதனை நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டிருந்தன.
குருநாகல் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் கொலை மற்றும் கொழும்பில் சில பகுதிகளில் செயற்படும் முக்கிய பாதாள உலகக் குழுவின் தலைவரான ரோஹா என்பவர் நேற்று பிற்பகல் கல்கிஸை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்தவாரம் இடம்பெற்றமையினை போன்று குறித்த நபரை படுகொலை செய்வதற்கு இந்த ஆயுதங்களைப் பயன்படுத்த பாதாள உலகக் கும்பல் திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நீதிமன்றங்களின் பாதுகாப்பு தொடர்பான தற்போது பிரச்சினைகள் பல ஏற்பட்டிருக்கும் நிலையில் அதற்குப் பிரதியுத்தரமாக நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களினதும் மேலதிக பாதுகாப்பிற்காக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.