பிறந்திருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான புதுவருடத்தினை அழுத்தம் மற்றும் அடக்குமுறையுணர்வின்றி சுதந்திரமான ஒரு சூழலில் புது வருடத்தை வரவேற்போம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பிறந்திருக்கும் புதுவருடத்தினை முன்னிட்டு வௌியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட பிரதமர்,
2016 புது வருடமானது மக்கள் எதிர்பார்ப்புக்களை வெற்றியடையச் செய்து, ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும், ஒழுக்கநெறி மிக்க சமூக சூழ்நிலையொன்றினுள் நுழைவதற்கான விரிவான ஒரு சந்தர்ப்பத்தை இலங்கை சமூகத்துக்கு வழங்கும் வகையில் பிறக்கிறது.
அழுத்தம் மற்றும் அடக்குமுறையுணர்வின்றி சுதந்திரமான ஒரு சூழலில் புது வருடத்தை வரவேற்கக் கிடைத்தமையானது நாம் பெற்றுக் கொண்ட பாரிய வெற்றியாகும்.
இன்று நம் முன்பே புதியதொரு அரசியல் கலாசாரம் காணப்படுகிறது. இது இன, மத, கட்சி பேதங்களை ஒதுக்கி தேசத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய காலமாகும்.
மனித கௌரவத்தைப் பாதுகாக்கும், நிலையான அபிவிருத்தியை அடைந்த ஒரு தேசமாக எமது நாட்டை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு புது வருடத்தில் எம் முன்பு உள்ள பாரிய சவாலாக காணப்படுகிறது.
பிறக்கும் புதுவருடத்தில் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக பாதுகாப்பு பெற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவது எமது ஒரே நோக்கமாக காணப்படுவதோடு, அதற்காக வேண்டி தற்போதைய அரசாங்கத்தோடு தோளோடு தோள் நின்று செயற்படுவதற்காக சாதகமான சிந்தனை கொண்ட அனைத்து மக்களும் ஒன்றிணைவர் என்று நான் நம்புகிறேன்.
2016 ஆம் வருடமானது அனைத்து சிறந்த நோக்கங்களும் சிறப்பாக வெற்றியடையக் கூடிய வருடமாக அமையட்டும் என்று பிரார்த்திக்கிறேன் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.