கடும் வெயிலில் அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் ‘மேக்கப்’ போட்டு நடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோடை வெயில் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களையும் வறுத்து எடுக்கிறது. மக்களால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. ரோடுகளில் அனல் வீசுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். நடிகர்-நடிகைகளும் படப்பிடிப்புகளில் கடும் வெயிலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
இதனால் ஐதராபாத்தில் நடந்த ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிக்கின்றனர். ஆயிரக்கணக்கான துணை நடிகர்-நடிகைகளும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பில் அனுஷ்காவும், தமன்னாவும் தங்களால் கடும் வெயிலில் மேக்கப்போட்டு நடிக்க கஷ்டமாக இருக்கிறது என்றனர். துணை நடிகர்களும் வியர்வையில் குளித்தபடி சுருண்டார்கள்.
இதைத்தொடர்ந்து பாகுபலி இரண்டாம் பாகம் படத்தின் படப்பிடிப்பை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக படத்தின் டைரக்டர் ராஜ மவுலி அறிவித்தார்.
விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிக்கும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே கொளுத்தும் வெயிலில் நடந்து வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு குளுகுளு பகுதியான காஷ்மீருக்கு மாற்றப்பட்டு உள்ளது.
கார்த்தி நடிக்கும் காஸ்மோரா, சுந்தர்.சி. இயக்கும் ‘முத்தின கத்திரிக்கா,’ படங்களின் படப்பிடிப்புகள் சென்னையில் கொளுத்தும் வெயிலில் நடக்கின்றன. இதுபோல் சிம்பு-மஞ்சிமா நடிக்கும் அச்சம் என்பது மடமையடா, வெங்கட் பிரபுவின் சென்னை-28 இரண்டாம் பாகம், விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் அருண்விஜய் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகளும் சென்னையில் கொளுத்தும் வெயிலில் நடந்து வருகின்றன.
நடிகர்-நடிகைகள் தங்கள் காட்சிகளில் நடித்து முடித்ததும் கேரவனுக்குள் சென்று முடங்கி விடுகின்றனர். வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பெரும்பாலும் இரவிலும் காலை மற்றும் மாலையிலும் படப்பிடிப்புகளை நடத்துகிறார்கள். பகல் வேளையில் படப்பிடிப்புகள் நடத்துவதை தவிர்க்கின்றனர்.
சூர்யா நடிக்கும் எஸ்-3 படத்தை குறிப்பிட்ட நாளைக்குள் முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால் நெல்லூர் பகுதியில் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்பு குழுவினரை வெயில் வாட்டி எடுக்கிறது. மேலும் பல முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகளை குளிர் பிரதேசங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் மாற்றி உள்ளனர்.