அனுமதியற்ற மருந்தகத்தால் ஒருவர் உயிரிழப்பு: சுட்டிக்காட்டிய அமைச்சருக்கு மா.சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவில் அனுமதி பத்திரமின்றி இயங்கிவரும் மருந்தகத்தில் பெற்றுக் கொண்ட மருந்தினால் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் அவற்றை மூடுவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் உத்தரவிட்டிருக்கும் நிலையில், மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். இதன் காரணமாக அமைச்சர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 126 வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இதன் போது அமைச்சர் அனந்தி சசிதரனின் சிறப்புரிமை மீறல் தொடர்பான விசேட கவனயீர்ப்பு ஒன்றை மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபைக்கு கொண்டுவந்தார். மேற்படி விசேட கவனயீர்ப்பின் மீது நடைபெற்ற விவாதத்தின் போதே அமைச்சர் வெளிநடப்பு செய்துள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன்,

வைத்திய சாலைகளில் வைத்தியர்களின் சிபார்சுடன் வழங்கப்படும் கருக்கலைப்பு மாத்திரைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மருந்தகங்களில் சாதாரணமாக மருத்துவரின் சிபார்சு இல்லாமலேயே வழங்கப்படுகிறது.

இவ்வாறு கருக்கலைப்பு மத்திரையை பெற்று பயன்படுத்திய பெண் ஒருவர் கருப்பை வெடித்து உயிரிழந்துள்ளார். மேலும் சில மருந்துகள் பக்க விளைவாக போதையை உண்டாக்கும் தன்மை கொண்டது. அவ்வாறான மருந்துகளும் மருத்துவரின் சிபார்சு இல்லாமல் மருந்தகங்களில் வழங்கப்படுகிறது.

இதேபோல் பாலியல் உணர்வை தூண்டக்கூடிய மருந்துகள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. அதனை விற்பதற்கு தடையில்லை. இருந்தாலும் மருத்துவருடைய சிபார்சு நிச்சயமாக தேவை. ஆனால் மருத்துவரின் சிபார்சு இல்லாமல் அனைவரும் பெற்றுக்கொளவதால் பின்னர் பல விளைவுகள் உண்டாகின்றது.

குறிப்பாக மாரடைப்பு, பக்கவாதம், இதனால் உயிரிழப்பு கூட உருவாகலாம். ஆகவே மக்களை சிரமப்படுத்தும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மருந்தகங்களை மூடுமாறு உத்தரவிடவில்லை. மாறாக மக்களுக்கு நன்மையளிக்கும் வகையிலேயே அந்த உத்தரவை வழங்கினேன்.

நீண்டகாலம் மருத்துவராக இருந்த ஒருவர் இப்போது அரசியல் வாதியாக உள்ளார். அவர் மருந்தக உரிமையாளர் அல்லாத ஒருவரை அழைத்துவந்து மிக கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி என்னுடைய சிறப்புரிமையை மீறும் வகையில் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசினார் என கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,

முல்லைத்தீவில் உரிய அனுமதி பத்திரம் இல்லாமல் இயங்கிய நிலையில் அமைச்சருடைய உத்தரவை அடுத்து மூடப்பட்ட இரு மருந்தகங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தது எதற்காக? என கேள்வி எழுப்பியதுடன் அமைச்சர் முல்லைத்தீவில் உணவு அருந்த செல்லும் இடங்கள் என உச்சரித்தார்.

இதனையடுத்து பேசிய அமைச்சர் ஞா.குணசீலன் இவ்வாறு தரக்குறைவான வார்த்தைகளே முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் பேசப்பட்டது. இதுவும் எனது சிறப்புரிமை மீறலாகும் என கூறி அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

Related Posts