அனுமதிப்பத்திரம் இன்றி பனைக்குற்றிகளை ஏற்றிச்சென்ற இருவர் இளவாலைப் பொலிஸாரினால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மாதகல் பகுதியில் இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டாரா தலைமையிலான பொலிஸ் குழுவினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பேதே அனுமதிப்பத்திரம் இன்றி பனைக்குற்றிகளை ஏற்றிச்சென்ற இருவர் மாட்டிக்கொண்டனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
வீதியால் பனைக்குற்றிகளுடன் வந்த உழவுயந்திரத்தை மறித்த பொலிஸார் அனுமதிப்பத்திரம் மற்றும் பனை தறித்தமைக்கான அனுமதிப் பத்திரங்களை கோரிய போது அத்தகைய அனுமதிப்பத்திரங்கள் எவையும் இன்றி 23 பனைமரங்கள் தறிக்கப்பட்டு எடுத்து செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து பனைக் குற்றிகளை ஏற்றி வந்த சாரதியும் கூட உழவுயந்திரத்தில் ஏறி வந்தவரையும் தாம் கைது செய்துள்ளதாகவும் பனைக்குற்றிகளுடன் உழவுயந்திரங்களையும் மீட்டுள்ளதாகவும் இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும் மற்றும் பொருட்களும் இன்று புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட அண்மையில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட மாதகல் பகுதியில் பனைகள் களவாக தறித்து எடுத்து செல்லப்படும் சம்பவங்கள் தொடாந்து இடம் பெற்று வருவதாக அப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.