அனுமதிக்கப்பட்டபோது ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்: மருத்துவ அறிக்கை தகவல்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது,மயக்க நிலையிலேயே இருந்தார் என்று தமிழக அரசால் வெளியிடப்பட்ட புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை ஆகியவற்றை தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று (திங்கள்கிழமை) வெளியிட்டார்.

புது தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கு 5 முறை சென்னை வந்து சிகிச்சை அளித்தனர். அது தொடர்பான விவரங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக அரசிடம் வழங்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் :

கடந்த ஆண்டு செப் 22-ஆம் தேதியன்று, இரவு 10 மணிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவாக உள்ளார் என்ற தகவல் தொலைபேசி மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போது மூச்சுத்திணறல் காரணமாக மயக்க நிலையில் இருந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நீர்சத்து குறைவு, நீரழிவு உள்ளிட்ட பிரச்சனைகளால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தைராய்டு பிரச்சனை போன்ற பல குறைபாடுகளாலும் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தார்.

சில அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டியது போல, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுமுன், ஜெயலலிதா சில நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுவதற்கு அப்பல்லோ மருத்துவமனையின் சிகிச்சை அறிக்கை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் அறிக்கையில் எந்த ஆதாரமும் இல்லை.

அது போல மருத்துவமனையில் அனுமதிக்கப்படுமுன், அவருக்கு வழங்கப்பட்ட சில தவறான மருந்துகள்தான் அவர் உடல்நிலை மேலும் சிக்கலாகக் காரணமாக அமைந்தது என்று சில மறைமுகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாகக் கூறும் இந்த அறிக்கை, நீரிழிவு மற்றும் ரத்த உயர் அழுத்தம் போன்ற ஏற்கனவே இருந்து வந்த சில பிரச்சனைகளுக்கு , வாய்வழியாக மருந்துகளை உட்கொண்டு வந்தார், தோல் வியாதி ஒன்றுக்காக ஸ்டீராய்ட் மருந்து ஒன்றும் அவருக்கு தரப்பட்டுவந்தது என்று கூறியது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சைகள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள், மூத்த இதய நோய் மருத்துவர்கள், சுவாசப் பிரிவு மருத்துவர்கள், தொற்று நோய் துறையின் ஆலோசகர்கள் நீரிழிவு நோய் பிரிவு நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையின் பிசியோதெரபி நிபுணர்கள் பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். மேலும், சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையை சேர்ந்த சிறப்பு பிசியோதெரபி பிரிவு குழுவினரும் பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கண்காணிக்க தமிழ்நாடு அரசின் சார்பில் 5 மருத்துவர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அதற்கான அரசாணை கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது.

தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள், 5 முறை சென்னை வந்து ஜெயலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர்.

மயக்க நிலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, சிகிச்சைக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பினார். பின்னர், மருத்துவமனையில் குடும்பத்தினருடனும், காவிரி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சில அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

தொடர் சிகிச்சை காரணமாக அவர் வாய் வழியாக உணவு உட்கொள்ளத் துவங்கினார். அதன் பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஜெயலலிதாவுக்கு தவறான மருந்துகள் தரப்பட்டதாகவும், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் சில அவதூறுகள் எழும்பியுள்ளன. இது முற்றிலும் தவறாகும்.

டிசம்பர் 4-ஆம் தேதி மாலையில் ஜெயலலிதாவுக்கு பெரும் மாரடைப்பு ஏற்பட்டது. உடனைடியாக அவர்க்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

டிசம்பர் 5-ஆம் தேதி திடீரென இதய செயல் இழப்பு ஏற்பட்ட போது அவரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதய,நரம்பியல் செயல்பாட்டில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது .இதய செயலிழப்பிற்கு பிறகு ஜெயலலிதா உடல்நிலையை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

ஜெயலலிதாவின் இதயம் செயல்படவில்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் ஓ. பன்னீர் செல்வம் , அமைச்சர் விஜயபாஸ்கர், சசிகலா உள்ளிட்டோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு, மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்ற மருத்துவக் குழுவினரைக் கேட்டுக்கொண்டனர்.

டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா காலமானார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டு

முன்னதாக, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் தலைமையிலான அணியினர் கடுமையாக குற்றம் சாட்டி வந்துள்ள நிலையில், நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஓ. பன்னீர் செல்வத்துக்கு முழுமையாகத் தெரியும் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் இன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை ஆகியவற்றை தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

Related Posts