அனர்த்தங்கள் தொடர்பில் கவனம் பாதிப்புகளுக்குப் பின்னரும் அவசியம்!

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்புகளிலிருந்து விடுபட்ட பின்னர் இயற்கை அனர்த்தத்தை மறந்துவிடுகின்றனர் எனபதை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அனர்த்தங்களைத் தவிர்க்க – பாதிப்புகளைக் குறைக்க – மக்களைப் பாதுகாக்க நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று திட்டங்களை வகுக்கவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

நாட்டின் நலன்கருதி இதுபோன்ற விடயங்களில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பாரபட்சமின்றி செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ள அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அவற்றிலிருந்து மீள்வது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட அமர்வில் உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் எம்.பி. மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்த, காயமடைந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த இயற்கை அனர்த்தத்தால் சமூகத்தின் பலவீனமான பிரிவினரே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எமது பொறுப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் துயரங்கள் குறைக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும். பலவீனமான பிரிவினருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தவிர்க்க ஏனைய பிரிவினர் உதவி செய்யவேண்டும். அரசு இந்த மக்களை சிறந்த முறையில் கவனிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள் அந்த பாதிப்புகளிலிருந்து விடுபடும்போது நாங்கள் இயற்கை அனர்த்தம் குறித்து மறந்துவிடுகின்றோம். இதனால் இயற்கை அனர்த்தம் மீண்டும இடம்பெறக்கூடும். இந்த நிலைமை குறித்து அவதானிக்கவேண்டும்” – என்றார்.

இதேவேளை, இந்தச் சந்தர்ப்பத்தில் சில கேள்விகள் எழுப்ப நான் விரும்புகின்றேன் என்று கூறிய சம்பந்தன் எம்.பி., “இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க நாம் எவ்வளவு தயாராக இருக்கின்றோம்? பலவீனமான மக்களை இவற்றிலிருந்து பாதுகாக்க எவ்வளவு தயாராக இருக்கின்றோம்? நாம் தயாராக இருக்கும் பட்சத்தில் பாதிப்புகளைக் குறைக்க முடியும். இதற்காக நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறவேண்டும். அப்போதுதான் அனர்த்தம் இடம்பெறும் பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாக்க முடியும். வறிய மக்களைப் பாதுகாக்க முடியும். இவ்வாறான நிலையில், அனர்த்தங்களைக் குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

அனர்த்தங்களைக் குறைக்க நீதியாக ஆராய்ந்து திட்டமிட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். ஆனால், நாம் செயற்பட முடியாத நிலையில் இருக்கின்றோம்.

கடன்சுமை உள்ள நாடுதான் எமது நாடு. வருமானத்தைவிட கடன் அதிகமாக உள்ளது. ஆடம்பரமான செயற்பாடுகளுக்காக அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனிநபர் பெருமைகளை நிலைநாட்டுவதற்காக துறைமுகங்கள், விமானநிலையங்கள் என்பன அமைக்கப்பட்டுள்ளன. இவற்றினூடாக மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது. எந்த வருமானமும் இல்லை. வளங்களும் வீணடிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில், இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பது குறித்து நாம் ஆராயவேண்டும். இந்த விடயங்களில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டும். அபிவிருத்தியிலும், வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவேண்டும். உள்நாட்டவர், வெளிநாட்டவர் அச்சமின்றி முதலீடுகளை மேற்கொள்ளும் நிலையை ஏற்படுத்தவேண்டும். நாட்டின் நன்மைக்காக பாரபட்சமின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதனூடாக சமாதானம் ஏற்படமுடியும்.

இயற்கை அனர்த்தம் காரணமாக மாவட்ட ரீதியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் நிவாரணங்கள் மாவட்ட அடிப்படையில் வழங்கப்படவேண்டும்” – என்றார்.

Related Posts