அநுராதபுரம், மகஸின் சிறைகளில் 17 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி போராட்டத்தில் குதிப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியிலிருந்து தாம் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றோம் எனவும், எனவே உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் இன்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், கொழும்பு – மகஸின் சிறைச்சாலையின் ‘ஜே’ பிரிவில் உள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளும், பெண்கள் பிரிவில் உள்ள ஒரு பெண் தமிழ் அரசியல் கைதியுமாக 15 பேர் நாளை செவ்வாய்க்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர்.

பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா.நீதிநாதன், க.வேதநாயகம், ந.தர்மராஜா, சு.ஞானசீலன், தயாபரன், செல்லத்துரை கிருபானந்தன், தி.மனோகரன், யோசப் செபஸ்சியான், சுப்பிரமணியன் கபிலன், இராசதுரை திருவருள், இரவீந்திரன் மதனி ஆகியோரே நாளை செவ்வாய்க்கிழமை மகஸின் சிறைச்சாலையில் ண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இது தொடர்பான அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் – காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புப் பிரேரணை ஒன்றை, எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கொண்டுவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts