அநீதிகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகள் வீரியமான தற்கொலை தாக்குதலை நடத்தினர் – இம்ரான் கான்

விரக்தி மற்றும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளினால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் மதம் சார்ந்து அவர்கள் தாக்குதல்களை நடத்தவில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மேலும், செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு முன்னதாகவே இந்துக்களான விடுதலை புலிகள் வீரியமான தற்கொலை தாக்குதல் முறைமையை பயன்படுத்தி இருக்கின்றார்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை இன்று விடுதலை செய்வதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் நேற்று(வியாழக்கிழமை) முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

குறித்த தீர்மானம் தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய பாகிஸ்தான பிரதமர், “இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்வதாக இந்தியா தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றது. தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்னதாகவே உலக அளவில் வீரியமான தற்கொலை தாக்குதலைளை விடுதலை புலிகள் நடத்தியிருந்தனர்.

விடுதலைப் புலிகள் சார்பில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள். அவர்கள் மதத்தின் பெயரால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை செய்தனர்” என இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் வரலாற்றில் இம்ரான் கானின் இன்றைய நாடாளுமன்ற உரை வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒன்றாக சர்வதேச ரீதியில் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts