அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் தொடருந்து சேவைகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் பயணிகளிடம் கேட்டுள்ளது.
இது தொடர்பில் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்ததாவது;
கோவிட்-19 வைரஸ் பரவல் தாக்கத்தின் காரணமாக தொடருந்து சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் மிகக் குறைவான மட்டத்தில் காணப்பட்டது.
இதனைக் கருத்திற் கொண்டு அதிவேக தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. மேலும் 10 தொடருந்து சேவைகளின் நேர அட்டவணையை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக கம்பஹா மாவட்டத்துக்கு ஊரடங்கு சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் ஒரு சில பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தொடருந்து சேவையை அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றாத பயணிகள் தொடருந்து நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளினால் வெளியேற்றப்படுவர் – என்றார்.