யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவையடுத்து சுன்னாகம் பிரதேசத்தில் விசேட அதிரடிப்படை பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு அங்கு தெருச்சண்டித்தனத்திலும், வாள் வெட்டு ரவுடித்தனத்திலும் ஈடுபடும் கும்பல்களையும் மற்றும் தேடப்படுபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.எம்.பெரேரா தெரிவித்துள்ளார்.
சுனனாகம் நகரில் கடையொன்றுக்குள் புகுந்த 9 பேர் அடங்கிய ரவுடிக் கும்பல் ஒன்று கடந்த ஞாயிறன்று இருவரை வெட்டிப் படுகாயப்படுத்தியதுடன் கடையையும் அடித்து நொறுக்கிவிட்டுத் தப்பிச் சென்றதையடுத்து அந்தப் பகுதியில் ரவுடிகளின் நடவடிக்கைகளை விசேட அதிரடிப்படையைக் கொண்டு கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவை நீதிமன்றத்திற்கு அழைத்து அதற்கான உத்தரவை நேரடியாகத் திங்களன்று கையளித்திருந்தார்.
இந்த நீதிமன்ற உத்தரவை திங்கட்கிழமை பிற்பகல் தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு ரவுடிக் கும்பல்களைச் சேர்ந்தவர்களையும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இனஞ்செழியன் முன்னிலையில் ஆஜராகிய யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.எம்.பெரேரா தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவு மட்டுமல்லாமல் அதற்கு அண்மையில் உள்ள ஏனைய பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கி விசேட அதிரடிப்படை பொலிசாரின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக நீதிமன்றத்தின் உத்தரவுகள் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் குற்றச் செயல்கள் சம்பந்தமாகத் தேடப்படுவபர்களையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் கண்காணிப்பு நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினருடைய மோட்டார் சைக்கிள் அணியின் சுற்றுக்காவல் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் அமைதியான வாழ்க்கையும் பாதுகாப்பும் யாழ்ப்பாணம் பொலிசாரினால் உறுதிப்படுத்தப்படும் என யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.எம்.பெரேரா யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியை நேரடியாகச் சந்தித்து நீதிமன்ற உத்தரவையடுத்து விசேட அதிரடிப்படை பொலிசாரைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.
இதனையடுத்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குத் தொடர்ந்து ஈடுபடும்பட்டு
குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிபதி இளஞ்செழியன் தமது முன்னிலையில் ஆஜராகிய யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.எம்.பெரேராவிடம் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் திறமையற்ற புலன் விசாரணைகளில் அவதானம் செலுத்தி பொறுப்பு வாய்ந்த உயரதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அவை தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஞாயிறன்று சுன்னாகம் நகரில் கடையொன்றினுள் பட்டப்பகலில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தையடுத்து அச்சத்தில் மூழ்கியிருந்த சுன்னாகம் நகர்ப்பகுதி திங்கட்கிழமை பிற்பகல் தொடக்கம் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசாரின் தேடுதல் கண்காணிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகளினால் சுறுசுறுப்படைந்திருப்பதாக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.