வலியடைப்பு சைவப் பிரகாச வித்தியாலயத்தின் புதிய அதிபரை மாற்றக்கோரி பாடசாலை சமூகத்தினர் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றைய தினம் காலை 7.00 மணிதொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை கல்லூரி வளாகத்திற்கு முன்னால் புதிய அதிபரை மாற்றி பழைய அதிபரை மீண்டும் பாடசாலையில் நியமிக்குமாறு பெற்றோர்கள், பழையமாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு ஆகியன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் போராட்டதில் ஈடுபட்டவர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பா.உ தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் ஆகியோருக்கு கடிதங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பாடசாலை நலன்விரும்பி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் எமது பாடசாலையில் உள்ள பழைய அதிபர் மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிபர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆயினும் பழைய அதிபர் பாடசாலைக்கு பல அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வந்தார்.
கடந்த வருடத்தில் வலிகாமம் கல்வி வலயத்தில் சிறந்த அதிபர் மற்றும் சிறந்த பாடடசாலைக்கான விருது இப் பாடசாலைக்கு கிடைத்தது. அவ்வாறு இருக்கையில் அதிபரை திடீரென மாற்றியது மனவருத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே ஆகக்குறைந்தது மூன்று வருடங்களுக்கேனும் பழைய அதிபரை மீண்டும் நியமிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.