அதிக புள்ளிகளை பெற்றும் நியமனம் இல்லை! – இந்திய கல்வி காரணமா?

அபிவிருத்தி உத்தியோகத்தர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு அதிக புள்ளிகளை பெற்றும், தமக்கு நியமனம் வழங்கப்படவில்லையென வவுனியா இராசேந்திரங்குளம் மற்றும் மகறம்பைகுளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் சத்தியமூர்த்தி யசிதரன் மற்றும் வேணி என்ற இரு பட்டதாரிகளும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு சகல பரீட்சைகளிலும் சித்திபெற்ற போதும் நியமனத்திற்கான கடிதம் கிடக்கவில்லையனெ தெரிவிக்கின்றனர்.

நேர்முகத் தேர்வின் புள்ளி அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்ட போதும் தாம் நிராகரிக்கப்பட்டுள்ளோம் என தெரிவிக்கும் இப்பட்டதாரிகள், இந்தியாவில் கல்விகற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செயலகத்திற்குச் சென்று இது தொடர்பாக கேட்டபோதும், இந்தியாவில் கல்வி கற்றமை காரணமாக இருக்கலாமென தம்மிடம் தெரிவித்ததாக இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

போர்ச்சூழல் காரணமாக இந்தியாவிற்குச் சென்ற தாம், கஷ்டங்களுக்கு மத்தியில் கல்விகற்று வேலைவாய்ப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையில் இலங்கைக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இலங்கை குடியுரிமை உள்ளவர்களுக்கு அரச உத்தியோகம் தரமுடியாதென இந்திய அரசாங்கமும் மறுப்பதாக தெரிவித்த இவர்கள், இலங்கையில் தமக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லையென அங்கலாய்க்கின்றனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் தமக்கு கிடைக்கவுள்ள தொழிலையும் இல்லாமல் செய்யவேண்டாமென கோரிக்கை விடுகின்றனர்.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட உதவிமாவட்ட செயலர் ந.கமலதாசிடம் கேட்டபோது, குறித்த நியமனங்கள் தொடர்பாக தேசிய கொள்கைள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சே தீர்மானிக்க வேண்டுமென குறிப்பிட்டார்.

Related Posts