அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் தமிழர்களுக்கு வீடு பறிபோனதா? : சத்தியலிங்கம்

வவுனியா மாவட்டச் செயலக அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் தமிழர்களுக்கான வீடுகள் பறிபோனதா என வட.மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (திங்கட்கிழமை) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“வட.மாகாணத்தில் 1990 டிசம்பர் 31ம் திகதிக்கு முன் இடம்பெயர்ந்த மக்களினை மீளக்குடியமர்த்துவதற்கான விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

2018ம் வருடம் 342 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 50 வீடுகள் சிங்கள மக்களிற்கும், 292 வீடுகள் முஸ்லிம் மக்களிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 15ம் திகதி மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனைச் சந்தித்து 1990ம் ஆண்டுக்கு டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் சிங்கள,முஸ்லிம் மக்கள் மாத்திரம் இடம்பெயரவில்லை பெருந்தொகையான தமிழ் மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர்.

எனவே சிங்கள மற்றும் முஸ்லிம்களுக்கான மீள்குடியேற்றம் என்பதை நீக்கி வடக்கு மாகாணத்திற்கான இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என என்னால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

17ம் திகதி மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரால் வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் திட்டத்திற்குள் எல்லோரையும் உள்வாங்குமாறு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் இக்கடிதமானது வவுனியா கச்சேரியில் இருந்து பிரதேச செயலாளர்களிற்கு அனுப்பப்படவில்லை. மேலும் அராசாங்க அதிபருக்கும் இவ்விடயம் தெரியப்படுத்தப்படவில்லை என்பதுடன், இக்கடிதத்தினை இத்திட்டத்திற்கு பொருத்தமான அதிகாரிகள் அப்படியே கச்சேரியிலேயே வைத்திருந்துள்ளனர்.

1ம்திகதி 2ம் திகதிகளில் இது தொடர்பாக அரசாங்க அதிபருடன் கதைக்கப்பட்டதன் பின்னர் வவுனியா பிரதேச செயலாளருக்கு 1ம் திகதியன்று இக்கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஏனைய பிரதேச செயலாளர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. எனவே மாவட்டச் செயலகத்தால் ஏன் இக்கடிதம் அனுப்பி வைக்கப்படவில்லை என்பதை 25ம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட வேண்டும்” என வட.மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மேலும் தெரிவித்தார்.

Related Posts