நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38 ஆயிரத்து 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் பாதுகாப்பான இடங்களுக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளின் போதே குறித்த 8 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது. வெள்ளம், மண்சரிவு மற்றும் இடிமின்னல் தாக்கம் ஆகியவற்றில் சிக்கியே இவர்கள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரிக்கும் அனர்த்தங்களால் இதுவரை 19 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 918 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரத்தினபுரி, களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு களனி, மகாவலி போன்ற கங்கைகளின் நீர்மட்டம் அதியுச்ச கட்டத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதோடு, முப்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தென் மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளை பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அனர்த்த பகுதிகளில் உள்ள பாடசாலைகள் குறித்து மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானம் எடுக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.