அண்மைய நாள்களில் பரவிவரும் கோரோனா வைரஸ் ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு எளிதாகத் தொற்றுகிறது

நாட்டில் அண்மைய நாள்களில் பரவி வரும் கோரோனா வைரஸ் ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு எளிதில் தொற்றுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கோரோனா வைரஸைப் பற்றி ஆராய்ந்து வரும் மருத்துவ வல்லுநர்கள், தற்போது பரவிவரும் வைரஸின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதாகவும், அது வேகமாகவும் எளிதாகவும் பரவக்கூடுமெனக் கண்டறியந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர், மருத்துவர் ஜெயருவன் பண்டார தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எனவே, வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவின் பணிப்பாளர் மருத்துவர், பாலிதா கருணபிரேம, நாட்டில் கோவிட் – 19 நோய்க்கு சிகிச்சை வழங்கும் திறனில் 70 சதவீதம் இப்போது நோயாளிகள் நிறைந்ததாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, கோவிட் 19 வைரஸை உலகில் இருந்து ஒழிக்கும் வரை அதனுடன் மக்கள் வாழப் பழக வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கோரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முன்னர் ஊரடங்கு உத்தரவை நீக்க முடியாது என்றும் நாட்டை சமாளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று ஆரம்பமாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சையை கோரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்த முடியும் என்று தான் நம்புவதாகவும் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர கூறினார்.

Related Posts