சிறீலங்காவில் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தினைத் தேடி வருவதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அஜித் பெரேரோ தெரிவிக்கையில்,
அணுமின் நிலையத்தை அமைப்பதற்கு பொருத்தமான இடம் இன்னமும் தெரிவுசெய்யப்படவில்லை.
அனைத்துலக அணுசக்தி முகவர் அமைப்புடன் இணைந்து அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தினை தெரிவுசெய்யும் பணியில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அணுமின் நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்யும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தாலும், அணுமின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் இறுதி முடிவை இன்னமும் எடுக்கவில்லை.
சுற்றாடல் கரிசனைகளை உள்ளடக்கிய உணர்வுபூர்வமான விவகாரம் என்பதால், அணுமின் நிலையத்தை அமைக்கும் முடிவை எடுப்பதற்கு, வழக்கத்தை விட நீண்டகாலம் எடுக்கும்.
சிறிலங்கா தற்போது நீர்மின், அனல்மின், திட்டங்களின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி, மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்துகிறோம்.
இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையங்களால், சிறிலங்காவுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள அணுமின் நிலையங்களினால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களைக் கண்காணிக்கும் ஆற்றலை சி்றிலங்கா கொண்டிருக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.