அணுசக்தி ஒப்பந்தம் மூலம் புதுப்பிக்கப்படும் இந்திய- அமெரிக்க உறவு

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு புதுப்பிக்கப்படுவதற்கு அணுசக்தி ஒப்பந்தம் முக்கிய காரணமாக விளங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

obama-modi-1

obama-modi-2

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் கூட்டாக கலந்துகொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது நரேந்தி்ர மோடி இவ்வாறு கூறினார்.

இருநாடுகளுக்கு இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய ஒப்பந்தங்கள் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் சுத்தமான எரிசக்தியை பெறுவதற்கான வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த நான்கு மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் விளைவாக, 6 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இருநாட்டு அணுசக்தி ஒப்பந்தம் தற்போது பத்தாண்டுகளுக்கு பிறகு முழுமை பெறும் நிலையை அடைந்துள்ளது.
குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டிலேயே இந்த ஒப்பந்தம் தொடர்பான முன்னேற்றம் கடைசியாக காணப்பட்டது.

தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த ஒப்பந்தம், இப்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

இதனிடையே, இருநாடுகளும் ஒன்றிணைந்து பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இங்கு தெரிவித்தார்.

மேலும், இந்திய நகர்ப் பகுதிகளில் சுத்தமான சுற்றுச்சூழலுக்காக கூட்டுத் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் உறுப்புரிமை பெற்றுத்தர அமெரிக்கா முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் ஒபாமா நம்பிக்கை அளித்தார்.

இந்தியாவுக்கு மூன்று நாள் சிறப்பு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, முதல் நாளான நேற்று பல்வேறு நிகழ்சிகளில் கலந்துக்கொண்டார்.

முன்னதாக, நரேந்திர மோடி வழங்கிய சிறப்பு விருந்துபசாரத்திலும் கலந்துகொண்ட ஒபாமா, மோடியுடன் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றையும் நடத்தினார்.

அமெரிக்க அதிபர் டில்லி விமான நிலையம் வந்தடைந்தபோது, ராஜ்ய வரைமுறைகளை மீறிச்சென்று பிரதமர் மோடி நேரடியாகவே விமானநிலையம் சென்று அவரை வரவேற்றார்.

Related Posts