இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 0-3 என இழந்துள்ள இலங்கை அணி, கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அணித்தலைமையிலிருந்து விலகி ஓடப்போவதில்லை என, தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் 2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்ற இலங்கை, ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியை வென்றதோடு, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்றிருந்தது. ஆனால் இம்முறை, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை 0-3 என இழந்துள்ளது. முன்னைய தொடரில் கலக்கிய அஞ்சலோ மத்தியூஸ், இம்முறை எதிர்பார்த்தளவு சிறப்பாக விளையாடியிருக்கவில்லை.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த மத்தியூஸ், “நல்ல நேரங்களைப் போலவே, கெட்ட நேரங்களும் இருக்கும். அணித்தலைவராகவும் அணியாகவும், இது கடினமான நேரமாகும். ஆனால், இதிலிருந்து விலகி ஓட முடியாது. பிரச்சினைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்ததோடு, தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தால், இதிலிருந்து மீள முடியும் எனத் தெரிவித்தார்.
“கடந்த இரண்டு மாதங்களில், ஒரே பிரச்சினைகளையே நாங்கள் எதிர்கொண்டோம். ஒவ்வொரு போட்டியிலும் துடுப்பாட்டமோ, பந்துவீச்சோ அல்லது களத்தடுப்போ, எங்களைக் கைவிட்டுக் கொண்டிருந்தது. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இங்கிலாந்தை வெல்வதற்கு, அதிசிறப்பாக விளையாட வேண்டியிருந்தது. ஆனால், நாங்கள் அவ்வாறு விளையாடியிருக்கவில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து மோசமாகச் செயற்பட்டு, அத்தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், அழுத்தங்களை எதிர்கொண்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் அவ்வணி, சிறப்பாக விளையாடி வருகிறது. அதை உதாரணமாகக் காட்டிய மத்தியூஸ், “சில ஆண்டுகளுக்கு முன்னர், எங்களைப் போன்ற நிலையில் அவர்கள் இருந்தார்கள். மீளக்கட்டியெழுப்பில் காலத்தில் இருந்த அவர்கள், தங்கள் திட்டங்களைப் பின்பற்றினார்கள், அவர்களது வீரர்களைப் பின்பற்றினார்கள், தற்போது அதன் முடிவுகளை நீங்கள் பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.
இரு அணிகளுக்குமிடையிலான 5ஆவது போட்டி, நேற்று இடம்பெற்ற நிலையில், அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 324 ஓட்டங்களைக் குவிக்க, இலங்கை அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.