அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் வெள்ளிக்கிழமை யாழ் முனியப்பர் கோவில் முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி போராட்த்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
காலம்: 16.10.2015 வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 7.00 மணி
இடம்: முனியப்பர் கோவில் முன்றல் (யாழ் பொது நூலகத்திற்கு அருகாமை)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு–
கடந்த மூன்று தசாப்பதங்களாக சிறீலங்கா அரசினால் அவசர காலச்சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றின் கீழ் பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை (2015.10.12) தொடக்கம் சகல சிறைச்சாலைகளிலும் சாகும்வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
இவ்வாறு அரசியல் கைதிகளாக உள்ளவர்கள் எந்தவித விசாரணையுமின்றி 10 தொடக்கம் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதாக முறையிட்டுள்ளார்கள்.
இவர்களது விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை நடாத்தவுள்ளார்கள்.
மேற்படி போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது.
மேலும் மேற்படி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து மக்களையும் பல்கலைக்கழக சமூகத்தினர் பாடசாலை சமூகத்தினர் பொது அமைப்புக்களை சார்ந்தவர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கலந்து கொண்டு சிறைகளில் வாடும் எமது உறவுகளின் விடுதலைக்கு வலுச் சேர்க்க அணிதிரளுமாறு அழைக்கின்றோம்.
இவ்வாறுஅவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.