அடையாள அட்டை கிடைக்காத மாணவர்கள் எழுத்து மூலம் அறிவிக்கலாம்

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இதுவரை கிடைக்காவிடின் அது தொடர்பில் எழுத்து மூலம் அறியத்தருமாறு ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

NIC

உரிய வயதெல்லையை பூர்த்திசெய்த மாணவர்களின் அடையாள அட்டைகள் தொடர்பில் பாடசாலை அதிபர்கள் ஊடாக அறியத்தரப்பட வேண்டுமென ஆட்பதிவு ஆணையாளர் ஆர்.எம்.எஸ் சரத் குமார கூறியுள்ளார்.

உரிய தகுதிகளைக் கொண்ட சுமார் மூன்று இலட்சத்து 25 ஆயிரம் விண்ணப்பங்கள் இதுவரையில் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற 04 இலட்சம் விண்ணப்பங்களில், சில மாணவர்களின் விண்ணப்பங்கள் உரிய வயதெல்லையை கொண்டிருக்கவில்லை உரிய வயதெல்லையை கொண்ட சுமார் 65 ஆயிரம் மாணவர்களின் அடையாள அட்டைகள் விரைவில் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆட்பதிவு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அடையாள அட்டை கிடைக்காதவர்கள் 0112 59 36 34 என்ற திணைக்களத்தின் தொலைநகல் இலக்கத்திற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்தால், துரிதமாக அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களில் எவரேனும் இதுவரையில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காவிடின், தமது விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான வசதிகளை பெற்றுக்கொள்ளும் வகையில், அனைத்து பிரதேச செயலகங்களிலும் ஆட்பதிவு திணைக்களத்தின் பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளுக்கும் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகளின் அறிமுகத்தோடு புதிய நடைமுறையும் அமுலுக்கு வரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது இலங்கையில் 16 வயது நிரம்பியவர்களுக்கே தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படுகிறது.

இதற்கமைய 15 வயது நிரம்பிய அனைத்துப் பிரஜைகளுக்கும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான சட்டங்களை வகுத்து வருவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts