ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட இடங்களில் மாத்திரமே அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்ய வெளியில் செல்ல முடியும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண விளக்கமளித்துள்ளார்.
எனினும் அவசர நோய்க் காரணங்கள் மற்றும் நோய்த் தொற்றுத் தொடர்பான மருத்துவ ஆலோசனையைப் பெற, கிளிக் அட்டைகளுடன் வைத்தியசாலைகளுக்கு செல்வோரிடம் இந்த நடைமுறை பின்பற்றப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய தேவைகளுக்காக என்ற போதும் வீட்டிலிருந்து வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவது தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலக்கங்களின் அடிப்படையிலாகும் என ஜனாதிபதி செயலகம் நேற்று அறிவித்திருந்தது.
அதுதொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நடைமுறை நாடுமுழுவதும் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண குறிப்பிட்டார்.
தேசிய அடையாள அட்டை இலக்கம் 1 அல்லது 2 ஆகிய முடிவிலக்கம் திங்கட்கிழமையும், 3 அல்லது 4 எனின் செவ்வாய்க்கிழமையும், 5ம் 6ம் புதன், 7ம் 8ஆம் வியாழன், 9 மற்றும் 0 ஆகிய இலக்கங்களில் நிறைவுறின் வெள்ளிக்கிழமையே வெளியில் செல்ல முடியும்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள இடங்களில் வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள் திறக்க அனுமதிக்கப்படாத நிலையில் ஏதாவது அவசர அத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே வெளியில் செல்ல முடியும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்கள் கடமைக்குச் செல்வதில் அடையாள அட்டை இலக்க நடைமுறை கடைப்பிடிக்கப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.