அடுத்த முறை உங்களை சொந்த இடத்தில் சந்திக்க வேண்டும் – இடம்பெயர்ந்த மக்களிடம் ஹூசைன்

நான் அடுத்த தடவை வரும் போது, உங்களை சொந்த இடத்தில் தான் சந்திக்க வேண்டுமென விரும்புகின்றேன், என்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் உள்ள வலி வடக்கு மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

al-zied-hasan

யாழிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது, மருதனார்மடம் சபாபதிபிள்ளை நலன்புரி முகாமில் உள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, அவர் மக்களின் பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றம் குறித்து கேட்டறிந்துகொண்டார். அதன் பின்னர், மக்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, உங்களை பார்க்க வரும் அனைவரிடமும் உங்களின் பிரச்சினைகளை கூறி சளித்துப் போய் இருப்பீர்கள்.

ஆனாலும், உங்களை இன்று நான் சந்தித்தது போன்று அடுத்த தடவை வரும் போதும், உங்கள் சொந்த இடத்தில் சந்திக்க விரும்புவதாக கூறினார்.

ஆணையாளர் கூறியதை கேட்ட மக்கள் கைதட்டி தமது சந்தோசத்தினை வெளிப்படுத்தினார்கள். அத்துடன், தமது சொந்த இடங்களில் தங்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் ஆணையாளிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

அதேநேரம், நீங்கள் என்னை சந்திப்பதற்கு வந்ததற்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். நான் பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். அங்கு பல தலைவர்களையும், ஜனாதிபதிகள், பிரதமர்கள் என பலரை சந்தித்த போதிலும், இவர்களிலும் பார்க்க பாதிக்கப்பட்ட மக்கள் நீங்களே முக்கியமானவர்கள்.

பல அவலங்களை தற்போதும் சந்தித்துக்கொண்டுள்ள உங்கள் சார்பாக கதைப்பதே எனக்கு மிகவும் முக்கியமானது. அந்தவகையில், உங்களை சந்திப்பில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

அத்துடன், உங்களுடைய பிரச்சினைகளை இந்த அரசாங்கத்திற்கும், அரச அதிகாரிகளுக்கும் எடுத்துச் சொல்லி, தீர்த்து வைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கின்றது. அந்த கடமையினை நான் சரிவர செய்வேன்.

அதேவேளை, அடுத்த தடவை வரும் போது, உங்களின் சொந்த இடங்களில் உங்களை சந்திக்க வேண்டுமென்றும் நான் விரும்புகின்றேன். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் அவர் கூறினார்.

Related Posts