அடுத்த போட்டிகளிலும் மலிங்க சந்தேகமே

பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைவர் லசித் மலிங்க பங்குபற்றியிருக்காத நிலையில், ஆசியக் கிண்ணப் போட்டிகளின் எஞ்சிய போட்டிகளிலும் அவர் பங்குபெறுவது சந்தேகமானது என எதிர்பார்க்கப்படுகிறது.

லசித் மலிங்க இல்லாத நிலையில், அணியை வழிநடத்திய அஞ்சலோ மத்தியூஸ், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, லசித் மலிங்கவின் உடற்றகுதி தொடர்பான சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

‘லசித் மலிங்க, எப்போதுமே எங்களுக்கு முக்கியமான பந்துவீச்சாளராவார். துரதிர்ஷ்டவசமாக, பங்களாதேஷுக்கெதிரான போட்டியில் அவரால் பங்குபற்ற முடியவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளுக்கும் அவர் உடற்றகுதியைப் பெற்றுவிடுவாரா என்று எனக்குத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

லசித் மலிங்கவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையைத் தொடர்ந்து, 3 மாதங்களின் பின்னர் முதன்முறையாக, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் அவர் பங்குபற்றியிருந்தார். அப்போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி, போட்டியின் நாயகன் விருதையும் வென்றிருந்தார். எனினும், நேற்று இடம்பெற்ற போட்டியில் அவர் விளையாட முடியாது போனதோடு, போட்டியின் போது, கெந்திக் கெந்தியே அவர் நடந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

எனவே, இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரைக் கருத்திற்கொண்டு, ஆசியக் கிண்ணப் போட்டிகளில் மேலும் விளையாடும் ஆபத்தான பாதையை மலிங்க தேர்ந்தெடுப்பாரா எனத் தெரியவில்லை.

இதேவேளை, இப்போட்டியில், இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய வேகப்பந்து வீச்சாளராக மாறிவரும் இளம் வீரர் துஷ்மந்த சமீர, 14ஆவது ஓவரிலேயே தனது முதலாவது ஓவரை வீசியிருந்தார். இது, விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மத்தியூஸ், ‘சமீர சிறப்பாகப் பந்துவீசியிருந்தார். இறுதி ஓவர்களில் மலிங்கவின் பணியைச் செய்வதற்கு யாராவது வேண்டுமென எண்ணினோம். அத்தோடு, ஆடுகளத்தில் சுழற்சி இருந்தது. எனவே, சுழற்பந்து வீச்சாளர்களைத் தொடர்ந்தும் பயன்படுத்தினேன். சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை நான்கு, ஆறு ஓட்டங்களுக்கு அடிப்பதற்குத் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினார்கள். அதனால் தான் வேகப்பந்து வீச்சாளர்களைத் தாமதப்படுத்தினேன்” எனத் தெரிவித்தார்.

Related Posts