அடுத்த தீபாவளி ஒளிமயமாய் இருக்கும் என்கிறார் சம்பந்தன்

இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் நம்பிக்கை கொண்டுள்ளதோடு, அடுத்த வருட தீபாவளி பண்டிகை இந்த வருடத்தை விட மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் அமையுமென்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் புரையோடிப் போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்பில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இப்பணியை முன்னெடுத்துச் செல்லும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரிக்கப்படாத நாட்டிற்குள் சகல உரிமைகளையும் பெற்று சமத்துவத்துடன் வாழ்வதற்கே விரும்புவதாகவும், அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் இலங்கையர்கள் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தமது உரையில் கூறியுள்ளார்.

Related Posts