அடுத்த தலைமைக்கு வழிவிடுதல் சிறந்த தலைமைத்துவப் பண்பு : ஐங்கரநேசன்

சனசமூக நிலையங்களின் தலைவர்கள் தொடங்கி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரை எங்களிடையே எண்ணற்ற தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்களிற் பலர் ஆயுட்காலம் முழுவதும் தலைவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். இயலாத நிலையிலும் பதவியை அடுத்தவர்களிடம் கையளிக்கும் மனப்பாங்கு இவர்களிடம் இல்லை. உண்மையில், அடுத்த தலைமைக்கு வழிவிடுதல்தான் சிறந்த தலைமைத்துவப் பண்புகளில் முதன்மையானது என்று முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுப்பிட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் மாணவத் தலைவர்களுக்குச் சின்னம் சூட்டுகின்ற நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை (04.10.2017) நடைபெற்றது. பாடசாலை அதிபர் த.யுகேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது,

தலைமைத்துவப் பண்புகளைச் சிறுவயதில் இருந்தே கற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே மாணவர்களுக்குத் தலைமைப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் நல்ல தலைமைத்துவப் பண்புகளைக் கற்றுக் கொள்வதற்கும், அவற்றை வெளிப்படுத்துவதற்குமான வாய்ப்பாக இந்த தலைமைப் பொறுப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தலைமை கிடைத்தவுடன் பலருக்கு அதிகாரதோரணையும் கூடவே வந்துவிடும். அவ்வாறு இல்லாமல், தன்னிச்சையாகச் செயற்படுவதைத் தவிர்த்து, அடுத்தவர்களின் திறமைகளை மதித்து, அவர்களின் கருத்துகளையும் செவிமடுத்து இலக்கை நோக்கிக் கூட்டாகப் பயணிக்க வேண்டும்.

நெடுந்தொலைவு பறக்கும் வலசைப் பறவைகள் நல்ல தலைமைத்துவப் பண்புகளை வெளிக்காட்டுகின்றன. ஆங்கில V (வி) எழுத்து வடிவில்,தலைமைப் பறவை முன்னே பறக்க, அதன் இரண்டு பக்கங்களிலும் ஒழுங்கு மாறாமல் மற்றைய பறவைகள் பறப்பதைப் பார்க்கலாம். இங்கு, தலைமைப் பறவை காற்றுத் தடையை உடைக்கும் கடினமான பணியைச் செய்து, தன்னைப் பின்தொடரும் பறவைகள் சுலபமாகப் பறப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதே போன்றுதான், தலைமைப் பொறுப்புக்கு வரும் ஒருவர் அடுத்தவர் சுமைகளையும் தன் தோள்களில் சுமக்கக்கூடியவராக இருக்க வேண்டும்.

முன்னே செல்லும் தலைமைப் பறவை கடினமான பணியைச் செய்வதால் மற்றைய பறவைகளை விட முதலில் களைப்படைந்துவிடும். அப்போது, தானாக வழிகாட்டும் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகிவிடும். பின்னால் வந்து கொண்டிருக்கும் பறவைகளில் ஒன்று முன்னோக்கிச் சென்று தலைமைப் பொறுப்பை ஏற்று வழிகாட்ட, பயணம் தடைப்படாமல் தொடரும். பறவைகளிடம் காணப்படுகின்ற அடுத்த தலைமைக்கு வழிவிடும் பண்பு எங்களிடம் இல்லை. பறவைகளிடம் இருந்து உயரிய தலைமைத்துவப் பண்புகளை எமது மாணவத் தலைவர்கள் கற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் தமிழ்ச்சமூகத்துக்குச் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கவல்ல தலைவர்களாகஅவர்களால் உயர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts