அடுத்து, சார்க் செயற்கைக்கோளை ஏவுங்கள் – ஸ்ரீஹரிகோட்டாவில் பிரதமர் மோடி பேச்சு

சார்க் செயற்கைகோள் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைப்புடன் ஈடுபட வேண்டும். இந்தச் செயற்கைக்கோளை நமது அண்டை நாடுகளுக்கு நாம் பரிசாக வழங்குவோம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

modi

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2014 ஜூன் 30 அன்று பி.எஸ்.எல்.வி – சி23 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் விண்வெளி ஆராய்சிகள் உதவ வேண்டும். விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பங்குதாரர்களோடு இணைந்து விழிப்போடு ஈடுபட வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

விண்வெளி அனுபவத்தை இந்தியா வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும். அந்த வளர்ச்சியைக் கொண்டு சமூக மாற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் வளங்கள் பாதுகாப்பு ஆகியவற்றை நாம் பெற வேண்டும்.

உலக முழுவதும் ஒரே குடும்பம். இது இந்தியாவின் பழமை மிக்க பண்பாடு. இந்திய விண்வெளி திட்டங்கள் மனித இனத்திற்குச் சேவை செய்யும் நோக்கத்தைக் கொண்டவை. அதற்கு அதிகாரம் பெறும் நோக்கம் கிடையாது. விண்வெளி ஆராய்ச்சி உட்பட அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பாரம்பரியத்தைக் கொண்டது இந்தியா.

பாஸ்கராசார்யா, ஆர்யபட்டா ஆகிய நம் அறிவியல் முன்னோர்கள் தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டனர். அவர்கள் இன்றைய விஞ்ஞானத் தலைமுறைகளுக்கு முன்னோடியாகவே திகழ்கின்றனர். வளரும் நாடுகளுடன், முக்கியமாக அண்டைய நாடுகளுடன் இணைந்து விண்வெளித் தொழிநுட்ப வளர்ச்சியைப் பங்கிட்டு இந்தியா பயன்பெற வேண்டும்.

சார்க் செயற்கைக்கோளை உருவாக்கும் சவாலை விண்வெளி ஆராய்ச்சியாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த சார்க் துணைக்கோளை – சார்க் செயற்கைக்கோளை, சார்க் நாடுகளுக்கு நமது பரிசாக அளிப்போம்.

இந்திய விண்வெளித் திட்டங்களால் நாம் பெருமை கொள்வோம். ஏனென்றால், நம் விண்வெளித் திட்டங்கள், சர்வதேச நெருக்கடிகள் மற்றும் தடைகள் ஆகியவற்றை மீறி வளர்ந்தவை. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் தொலைநோக்குத் திட்டம் நிலவிற்கான விண்வெளிப் பயணத் திட்டம். நடந்து கொண்டிருக்கும் திட்டங்களில் செவ்வாய் கிரகத்திற்கான பயணம் மற்றும் செயற்கைக்கோள் கொண்டு வழிநடத்தும் முறை பற்றிக் குறிப்பிட்டார்.

மேலும், தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களுக்கும் அது நவீன தகவல் தொடர்பை ஏற்படுத்துகின்றன, தரமான கல்வி மூலம் சிறிய கிராமங்களில் உள்ள குழந்தைகளின் மேம்பாட்டிற்கு உதவும். மேலும் அனைவருக்கும் தரமான சுகாதார சேவை அளிக்க உதவும். டிஜிட்டல் இந்தியா அதாவது கணினி மயமாக்கப்பட்ட இந்தியா எனும் நோக்கத்தைச் செயல்படுத்துவதில் விண்வெளி தொழில்நுட்பத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அதற்கு 125 கோடி இந்திய மக்களை இணைக்கும் சக்தி உண்டு.

விண்வெளித் துறையின் தொடர் வளர்ச்சி நம் நோக்கங்களில் முன்னுரிமை பெற்றிருக்க வேண்டும். இன்னும் மேம்பட்ட செயற்கைக்கோளை உருவாக்கி நமது செயற்கைக்கோள் தடங்களை நாம் விரிவாக்க வேண்டும். உலகிற்கே ஏவுதளத்தை அளிக்கும் சக்தி இந்தியாவிற்கு உண்டு. அதனை நிஜமாக்க நாம் பாடுபட வேண்டும்.

விண்வெளித் துறையில் ஈடுபட, இந்திய இளைஞர்கள் முன்வர வேண்டும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இளம் விஞ்ஞானிகளின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. ராதாகிருஷ்ணனின் திறன், செயல்பாடு மற்றும் தலைமைத்துவம் மிகவும் பாராட்டுக்குரியகு ஆகும். இன்னும் சில மாதங்களில் செவ்வாய் கிரகத்திற்கு ஏவுகணை செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் குழுவிற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆந்திர பிரதேச ஆளுநர் நரசிம்மன், ஆந்திரபிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், விண்வெளித் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பேராசிரியர் யு.ஆர். ராவ், டாக்டர் கஸ்தூரிரங்கன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Related Posts