2006 தேர்தலுக்குப் பிறகு வடிவேலுவின் நகைச்சுவைக் கொண்டாட்டம் திரையுலகில் அதிரடியாகக் குறைந்துவிட்டது. வடிவேலு நாயகனாக நடித்த படங்களும் தோல்வியைச் சந்தித்தன. சந்தானமும் கடந்த சில வருடங்களாக நடித்தால் நாயகன்தான் என நகைச்சுவைக்கு டாட்டா காட்டிவிட்டார். நகரத்து கதைகளுக்கு சந்தானமும், கிராமத்துக் கதைகளுக்கு வடிவேலுவும் தங்களது வண்டியை தனித்தனியாக சிறப்பாக ஓட்டிக் கொண்டிருந்தனர். அவர்களது நாயகன் ஆசையே அவர்களது திரையுலகப் பாதையில் வேகத் தடையாக அமைந்துவிட்டது.
இந்த இடைவெளியில் சூரி குறிப்பிடும்படியான வளர்ச்சியைப் பெற்றுவிட்டார். விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து ஒரு படத்தில் கொஞ்சம் இறங்கினாலும், இன்னொரு படத்தில் ஏறி, தன்னை பேலன்ஸ் செய்து கொண்டார் சூரி.
கடந்த சில வாரங்களாக சூரி நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து அவருடைய இருப்பை அழுத்தமாகக் காட்டியிருக்கிறது. மே 20ம் தேதி ‘மருது’ படமும், மே 27ம் தேதி ‘இது நம்ம ஆளு’ படமும், ஜுன் 3ம் தேதி ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படமும் வெளியாகியுள்ளன. மூன்று படங்களிலுமே நாயகர்களையும் ஓவர்டேக் செய்யும் அளவிற்கு சூரியின் நகைச்சுவை அந்தந்த படங்களைக் காப்பாற்றியிருக்கிறது என்பதுதான் உண்மை.
வடிவேலு, சந்தானம் போல நாயகன் ஆசை வராமல் சூரி சூதானமாக இருந்தால் இன்னும் கொஞ்ச நாளைக்கு அவரை யாரும் அசைக்க முடியாது