2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி இயற்கை அனர்த்தத்தின் போதும் கடந்த காலங்களில் நடைபெற்ற போரின் போதும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.வடமராட்சி கிழக்கின் உடுத்துறை, மருதங்கேணி, தாளையடி, ஆழியவளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களை வீடுகள் தோறும் சென்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமராட்சிப் பகுதியினைப் பிரதி நிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் சு.சுகிர்தன், வடமராட்சி கிழக்குப் பகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமைப்பாளர் க.சூரியகாந்த், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கு.சர்வானந்தா ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற அவல நிலையில் இம்மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இம்மக்களினை நேரடியாகச் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினரிடம் அப்பகுதி மக்கள், தமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
அடிப்படைத் தேவைகளில் ஒன்றான வீடு உட்பட ஏனைய வசதிகள் எதுவுமற்ற நிலையில் வாழ்ந்து வரும் அம்மக்களின் தேவைகளை உடனடியாக தீர்க்கப்படுவதற்கு உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.