அடிப்படை வசதிகளற்ற நிலையில் 15 குடும்பங்கள் மீள்குடியமர்வு

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து 2015ஆம் ஆண்டு இறுதியில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கில் 15 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி மீளக்குடியேறியுள்ளனர்.

பலாலி வடக்கு அன்டனிபுரம் பகுதி, கடந்த 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. மேற்படி பகுதியில் மீளக்குடியமர்வதற்கு 165 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர். பதிவு செய்தவர்களில் தற்போது 15 மீனவ குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன.

விடுவிக்கப்பட்டு ஜந்து மாதங்கள் ஆகியும், மீள்குடியேறியவர்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம், மலசலகூடவசதி ஆகிய எதுவும் செய்துகொடுக்கப்படவில்லை.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையினால் இங்கு ஒரு நீர்த்தாங்கி வைக்கப்பட்டு, குடிநீர் விநியோகிக்கப்பட்டாலும், தற்போது நிலவும் வெப்பத்தின் காரணமாக அது போதாதுள்ளது.

இடம்பெயர்ந்த காலங்களில் கொண்டு சென்ற தகரங்களை கொண்டே குடிசை அமைத்துள்ளதுடன், தற்போது நிலவும் வெப்பநிலையை அந்தக் கொட்டகைக்குள் சமாளிக்க முடியதாக நிலையில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மலசலகூட வசதி இல்லாத காரணத்தால் அதிகாலையில் கடற்கரைக்கும், காடுகளுக்கும் சென்றும் இயற்கை கடன்களை கழிப்பதாக அந்த மக்கள் கூறுகின்றனர். அருகில் இராணுவ முன்னரங்கு காணப்படுவதனால் வயது வந்த பெண்கள் வளலாய் வடக்கு பகுதியிலுள்ள உறவினர்களின் மலசலகூடங்களை பாவிக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்தப் பகுதியில் 4 கிணறுகள் காணப்படுகின்ற நிலையில், அவற்றை பிரதேச செயலக அதிகாரிகள் புனரமைத்து தருவதாக கூறியிருந்த நிலையில் இதுவரை புனரமைப்பு பணிகள் எதுவும் இடம்பெறவில்லை.

நான்கு பேர், கட்டுமரத்தை நம்பி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். கிடைக்கின்ற மீன்களை உணவு தேவைக்கு எடுத்துக்கொள்வதுடன் மீதமுள்ள மீன்கள் உள்ளுரிலே விற்று தமது ஜீவனோபாயத்துக்குத் தேவையான சிறுதொகை பணத்தைப் பெற்றுக்கொள்ள முடிவதாக இப்பகுதி மீனவர் ஒருவர் கூறினர்.

பலாலி வடக்கில் இருந்து 1990ஆம் இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள் பருத்தித்துறை, சக்கோட்டை பகுதிகளில் வாழ்ந்து, தற்போது மீளக்குடியேறி வருகின்றனர்.

தங்களுக்கான வீட்டுத்திட்டம், குடிநீர் வசதி மற்றும் மலசலகூட வசதிகளை ஏற்படுத்தித்தர அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts